சிராடி மலைப்பாதையில் 10 நாட்களுக்குள் இலகுரக வாகன போக்குவரத்து தொடங்கப்படும் மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி
சிராடி மலைப்பாதையில் இன்னும் 10 நாட்களுக்குள் இலகுரக வாகன போக்குவரத்து தொடங்கப்படும் என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
ஹாசன்,
சிராடி மலைப்பாதையில் இன்னும் 10 நாட்களுக்குள் இலகுரக வாகன போக்குவரத்து தொடங்கப்படும் என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
உயர்மட்ட விசாரணை
கர்நாடக மாநில பொதுப்பணித்துறை மந்திரியும், ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா, நேற்று ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹாசன் டவுனில் தொழிற்பேட்டை தொடங்க 2,406 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலத்தை சிலர் வாங்கி விற்றுள்ளனர். தொழிற்பேட்டை தொடங்குவதாக சிலர் விவசாயிகளை ஏமாற்றி நிலங்களை வாங்கி உள்ளனர். கர்நாடக தொழிற்பேட்டை வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு உள்ளது. இந்த மோசடி குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். என்னுடைய மந்திரி பதவியை காப்பாற்ற நான் விரும்பவில்லை. ஏழை விவசாயிகள் ஏமாற்றப்படுவதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன். எனக்கு ஒரு வாரம் காலஅவகாசம் கொடுங்கள். மோசடி செய்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்.
இலகுரக வாகன போக்குவரத்து
பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக சென்று வருகின்றன. சிராடி மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சீரமைப்பு தொடர்பாக ஹாசன், தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை அளித்துள்ளனர். இதனால் சிராடி மலைப்பாதையில் இன்னும் 10 நாட்களுக்குள் இலகுரக வாகன போக்குவரத்து தொடங்கப்படும். கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. அந்த பாதையில் கர்நாடக அரசு சொகுசு பஸ்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார்.
Related Tags :
Next Story