தர்மபுரியில் நகராட்சி ஊழியர் வீட்டில் நகை–பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரியில் நகராட்சி ஊழியர் வீட்டில் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீட்டின் மாடியில் தனியாக ஒரு அறை உள்ளது. பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இந்த அறைக்கு அவ்வப்போது அவர் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு சங்கர் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தரைதளத்தில் தூங்கினார்கள். இந்த நிலையில் நேற்று காலை சங்கர் வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது மாடியில் உள்ள அறை திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதற்குள் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். வீட்டின் மாடியில் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதை நோட்டம் விட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.