வந்தவாசி அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி தாய் - மகன் பலி, உறவினர்கள் சாலை மறியல்


வந்தவாசி அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி தாய் - மகன் பலி, உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Sept 2018 5:32 AM IST (Updated: 2 Sept 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வந்தவாசி, 


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ள செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி (32). இவர்களது மகன் மணிகண்டன் (16). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

இந்த நிலையில், கார்த்தி வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தார். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த கறவை மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக இரவு 7 மணி அளவில் தாயும், மகனும் சென்றனர். கரும்பு தோட்டத்தின் வழியாக சென்றபோது, அறுந்து நிலத்தில் கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் இருவரும் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரம் என்பதால் 2 பேரும் பலியான தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், சுமதியும், அவருடைய மகன் மணிகண்டனும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுமதி, மணிகண்டன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, மின்வாரியத்தை கண்டித்து இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம் சாலை, செம்பூர் கூட்டுசாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், விளை நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. எந்த நேரத்திலும் மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் இருக்கிறது என்று ஏற்கனவே மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இருந்ததால் உயிர்பலி நிகழ்ந்து இருக்காது. எனவே மின்வாரியத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதுபற்றி அறிந்ததும் வந்தவாசி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், தாசில்தார் முரளிதரன் ஆகியோர் அங்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி தாய் - மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story