அன்னை தெரசாவின் அபூர்வ பொக்கிஷங்கள்


அன்னை தெரசாவின் அபூர்வ பொக்கிஷங்கள்
x
தினத்தந்தி 2 Sep 2018 8:15 AM GMT (Updated: 2 Sep 2018 8:15 AM GMT)

கருணைக் கடலாக வாழ்ந்து மறைந்தவர் அன்னை தெரசா.

காந்தியடிகளுக்குப் பிறகு உலகில் அதிகமான நாடுகளால் அஞ்சல் தலைகள் வெளியிட்டு கவுரவப்படுத்தப்பட்டவர் அன்னை தெரசாதான். அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இதுவரை அவர் குறித்து உலக நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகளை சேகரித்து, தெரசாவின் சேவையை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறி வருகிறார், வேலூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 44). பல்வேறு கண்காட்சிகளில் அவற்றை வைத்து அன்னை தெரசாவின் தொண்டுகளை விளக்கி வருகிறார்.

அன்னை தெரசாவின் அஞ்சல் தலைகளை சேகரிக்கும் ஆர்வம் எப்படி வந்தது?, வெளிநாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை களை எவ்வாறு சேகரித்தார்? என்பது பற்றி தமிழ்வாணன் சொல்கிறார்:

“நான் வேலூர் சத்துவாச்சாரியில் கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் பள்ளியில் படித்தேன். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனது மாமா ரஷியாவில் பணிபுரிந்தார். அப்போது அவர் எங்களுக்கு அனுப்பும் கடிதங்களை பார்த்தபோது, அதில் வித்தியாசமான அஞ்சல்தலைகள் இடம் பெற்றிருக்கும். அது என்ன என்றே தெரியாமல், படங்களுக்காக அதை வெட்டி நான் சேகரித்தேன். பின்னர் தான் அவை அஞ்சல்தலை என்று எனக்கு தெரியவந்தது. நான் படித்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த கன்னியாஸ்திரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிறைய கடிதங்கள் வரும். அவற்றையும் அவர்களிடமிருந்து வாங்கி, அதில் இருந்த அஞ்சல் தலைகளையும் வெட்டி எடுத்து சேகரித்து வந்தேன்.

வாலிபரான பின்னர் 1998-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கண்காட்சியில் நான் சேகரித்த மொத்த அஞ்சல் தலைகளையும் பார்வைக்கு வைத்திருந்தேன். அப்போது கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், எனது ஆர்வத்தை புரிந்து, ‘அஞ்சல் தலைகள் சேகரிப்பதற்கு ஒரு முறை உள்ளது. அனைத்தையும் சேகரிப்பதற்கு பதில் ஒரு புகழ் வாய்ந்த நபரை தேர்வு செய்து, அவர் தொடர்பான அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள், விமான தபால், கையெழுத்து, அவர் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் சேகரியுங்கள்’ என்றனர்.

நான் அன்னை தெரசாவை தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், பொதுவாக இறந்த பிரபலங்களுக்குத்தான் அஞ்சல்தலை வெளியிடுவார்கள். ஆனால் அன்னை தெரசா உயிரோடு இருக்கும்போதே அஞ்சல்தலை வெளியிடப்பட்ட பெருமைக்குரியவர். அவர் நோபல் பரிசு வாங்கிய தருணத்தில் இந்திய அரசு அவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது. இப்பெருமை அன்னை தெரசாவிற்கு மட்டும் தான் சேரும்.

அவரது சேவை மீது எனக்கு இருந்த ஈடுபாடு அவர் குறித்த அஞ்சல் தலைகளை தேடித்தேடி சேகரிக்க வைத்தது. எனது சேகரிப்பில் அவரது தலைமுடி, உடையின் ஒரு சிறிய பாகம், அவர் அணிந்திருந்த ஜெப மாலையில் ஒரு சிறிய பாகம் மற்றும் அவரது கையெழுத்து போன்றவைகளும் இடம் பிடித்துள்ளன.

அன்னை தெரசாவின் இளம் வயது காலம், சேவைப்பணி, பயணங்கள், புனிதர் பட்டம் போன்ற பல்வேறு நிலைகளை பல நாடுகள் அஞ்சல்தலைகளாக வெளியிட்டுள்ளன. இதுவரை அன்னை தெரசாவிற்கு 70 நாடுகள் வெளியிட்ட 313 அஞ்சல்தலைகள் என்னிடம் உள்ளது. தெரசாவை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு, அவர் நோபல் பரிசு வாங்கிய போது 30 பைசா மதிப்பு கொண்ட அஞ்சல்தலையும், இறந்தபோது ரூ.45 மதிப்பு கொண்ட அஞ்சல்தலையும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி புனிதர் பட்டம் பெற்றபோது ரூ.50 மதிப்பு கொண்ட அஞ்சல் தலையையும் வெளியிட்டுள்ளது. அவை அனைத்தும் எனது சேகரிப்பில் உள்ளன.

எனது சேகரிப்புக்கு எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்து வருகின்றனர். சில அரிய வகை அஞ்சல்தலைகளை சேகரிக்கும் போது செலவு அதிகமாகும். எனினும் நான் அதைப்பற்றி கவலைப்படாமல் பல நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகளை விலைகொடுத்து வாங்கி உள்ளேன். குறிப்பாக பாலஸ்தீன அதிபராக இருந்த யாஷர்அராபத்- அன்னைதெரசா சந்திப்பு தொடர்பாக வெளியிட்ட அஞ்சல்தலையை நான் ரூ.4,800 கொடுத்து வாங்கினேன். அன்னை தெரசா குறித்து இனி வெளியாகும் அஞ்சல் தலைகளும் எனது சேகரிப்பில் இடம் பெறும். அவர் பலரின் மனதில் வாழ்வது போல், ஏதோ ஒரு வகையில் எனது சேகரிப்பிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” 

Next Story