மதராசப்பட்டணம் சந்தித்த வில்லங்கமான விவகாரங்கள்
இந்திய பெருநகரங்களில் ஒன்றான சென்னை, தனது 379–வது பிறந்த தினத்தை சமீபத்தில் கொண்டாடியது.
இந்திய அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளில் மிக முக்கிய பங்காற்றி வரும் இந்த மாநகரத்தின் சிறப்புகளை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும்.
அதேநேரம் நாணயத்துக்கு இருபுறம் இருப்பது போல இந்த சிங்கார சென்னையின் வரலாற்றிலும் சில கரும்பக்கங்கள் உண்டு.
அதிலும் நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பு இந்த மதராசப்பட்டணத்தில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத சம்பவங்களை பற்றி கேட்டால் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் ஏற்படுகின்றன.
அப்படி அன்றைய மதராசப்பட்டணத்தை உலுக்கிய முக்கியமான சில சம்பவங்களை வரலாற்று நிபுணர் ராமகிருஷ்ணன் வெங்கடேஷ் தொகுத்து தருகிறார்...
கள்ளக்காதலில் பிறந்த மெட்ராஸ்?
தற்போதைய சென்னை நகரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் புவியியல் அமைப்பு ரீதியாக, வர்த்தக தளத்துக்கான கோட்டைக்குரிய வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. ஆயினும் சென்னையை நிறுவியவரும், மெட்ராசின் தந்தையாக கருதப்படுபவருமான பிரான்சிஸ் டே, கூவம் ஆற்றின் வடபகுதியில் கோட்டை ஒன்றை நிறுவ விரும்பினார்.
இதற்காக பலகட்ட போராட்டங்களை மேற்கொண்டு ஆங்கிலேய அரசிடம் இருந்து 1639–ம் ஆண்டு நிலம் வாங்கினார். 2 ஆண்டுகளுக்கு மதராசப்பட்டணத்துக்கான மானியத்தை பெற்ற அவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுமான பணிகளை தொடங்கினார்.
நல்ல குடிநீரோ, உள்ளூர் மக்களோ அதிகம் இல்லாத நிலையில் கோட்டைக்கான கற்கள் உள்பட அனைத்து பொருட்களையும் தொலைதூரத்தில் இருந்துதான் கொண்டு வரவேண்டும்.
கடலின் ஆழக்குறைவு காரணமாக சென்னை அருகே வர்த்தக கப்பல்களை நிறுத்தவோ, பேரிடர் காலத்தில் போர்க்கப்பல்களை அருகே கொண்டு வரவோ முடியாது. கடலில் 2 மைல்களுக்கு அப்பால்தான் கப்பல்களை நிறுத்த முடியும்.
இதனால் கப்பல் கேப்டன்களின் எதிர்ப்பையும், சாபத்தையும் சம்பாதித்தாலும் தான் நினைத்த பகுதியிலேயே கோட்டையை நிறுவுவதை பிடிவாதமாகக் கொண்டிருந்தார், பிரான்சிஸ் டே. இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.
அது என்னவென்றால்... கோட்டைக்கு அருகே உள்ள சாந்தோம் பகுதியில் வசித்து வந்த போர்ச்சுக்கீசிய பெண் ஒருவருடன் பிரான்சிஸ் டேவுக்கு கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது.
தனது காதலியின் அருகில் இருப்பதற்கு வசதியாகவே கூவம் நதிக்கரையில் கோட்டையை நிறுவுவதில் பிரான்சிஸ் டே பிடிவாதமாக இருந்ததாக அப்போதே வதந்தி பரவியது.
அப்படி கள்ளத்தொடர்பில் பிறந்த நகராகவே மெட்ராஸ் எனப்படும் சென்னை கருதப்படுகிறது.
சென்னை நகரின் தந்தையாக ‘பிரான்சிஸ் டே’ கருதப்படும் நிலையில், பெயர் தெரியாத அந்தப்பெண்தான் சென்னையின் தாயாக கருதப்படுகிறார்.
விடை தெரியா கொலை வழக்கு
நீதித்துறை வரலாற்றில் சில வழக்குகள் மர்மமாகவே நின்று போவது உண்டு.
அதுபோன்ற ஒரு வழக்கை சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய மெட்ராஸ் மாகாணமும் சந்தித்து இருந்தது.
‘மெட்ராஸ் கொலை வழக்கு’ அல்லது ‘டி லா ஹேய் கொலை’ வழக்கு என அழைக்கப்பட்ட அந்த வழக்கு மதராஸ் பட்டணத்தையும் கடந்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது காமராஜ் ஹாலாக மாறியிருக்கும் மாளிகை அந்தக் காலத்தில் நெவிங்டன் வீடு என அழைக்கப்பட்டது.
இங்கு இளவரசர்கள் மற்றும் ஜமீன்தாரின் வாரிசுகளுக்கான கல்விக்கூடம் செயல்பட்டு வந்தது. ராணி மேரி கல்லூரியை நிறுவிய டாரதி சிஸ்லியின் சகோதரரான டி லா ஹேய்தான் இந்த பள்ளிக்கு முதல்வராக இருந்தார்.
1919 அக்டோபர் 15–ந்தேதி நள்ளிரவில் அவரது படுக்கை அறைக்குள் நுழைந்த சிலர், அவரை சுட்டுக்கொன்றனர். விவகாரம் போலீசுக்கு போனது, வழக்கு வேகம் பிடித்தது. வழக்கு தீவிரமடைந்த போது, சிங்கம்பட்டி, கடம்பூர் ஜமீன்கள் விசாரணை வளையத்துக்குள் வந்தனர்.
டி லா ஹேய் அடிக்கடி தமிழர்களை ‘காட்டுமிராண்டிகள்’ என குறிப்பிடுவார். இதனால் கோபமடைந்த இந்த ஜமீன்கள் அவரை கொன்றுவிட்டதாக வழக்கு பதிவானது.
பின்னர் அது மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறிய சிங்கம்பட்டி ஜமீன், கடம்பூர் ஜமீனுக்கு எதிராக சாட்சி கூறினார். ஆனால் அது போதுமானதாக இல்லை எனக்கூறி கடம்பூர் ஜமீன் விடுதலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட டி லா ஹேய்க்கு அழகான, அவரைவிட மிகவும் இளமையான மனைவி இருந்தார். அந்த பள்ளியில் படித்த ஜமீன்தாரின் ஆண் வாரிசுகள் பலர், இவரது அழகில் கிறங்கிக் கிடந்தனர்.
அவர்களை தூண்டிவிட்டு, டி லா ஹேயை மனைவிதான் கொலை செய்தார் எனவும் வதந்தி பரவியது.
எது எப்படியோ, டி லா ஹேயை கொன்ற குற்றவாளி யார்? என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.
இந்த சம்பவத்தால் அந்த பள்ளிக் கூடம் மூடுவிழா கண்டதுதான் மிச்சம்.
ஆழ்வார்பேட்டை ராணி தொலைத்த நகைகள்
நாடு விடுதலையை நெருங்கிய நாட்களில் பரோடாவின் மன்னராக இருந்தவர் பிரதாப் சிங் கெய்க்வாட். இவரது குதிரைகள் மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் பந்தயங்களில் பங்கெடுத்து வந்ததால், அங்கு வருவதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். அங்கு குதிரைப் பந்தய சூதாட்டத்துக்காக, ஆழ்வார்பேட்டை ஜமீன்தார் அப்பாராவ் பகதூரின் மனைவி சீதா தேவியும் வருவது வழக்கம்.
அப்போது சீதா தேவியின் அழகில் மயங்கிய மன்னர் பிரதாப் சிங், அவரை திருமணம் செய்ய விரும்பினார். அந்த சமயத்தில் மன்னர் பிரதாப் சிங்குக்கு தனது முதல் மனைவி மூலம் 8 குழந்தைகளும், சீதா தேவிக்கு அப்பாராவ் மூலம் 3 குழந்தைகளும் இருந்தனர். எனினும் மன்னரின் காதலை சீதா தேவி ஏற்றுக்கொண்டார்.
இவர்களது திருமணத்துக்கு சட்டங்கள் இடையூறாக இருந்ததால், பல குறுக்கு வழிகளை கையாண்டனர்.
குறிப்பாக முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெறுவதற்காக சீதா தேவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். பின்னர் விவகாரத்து பெற்றபின் மீண்டும் இந்து மதத்துக்கு மாறி பிரதாப் சிங்கை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் 1943–ல் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
திருமணத்துக்குப்பின் மிகவும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தார், சீதா தேவி. புகை பிடிக்கும் பழக்கம் உடைய அவர், தனது சிகரெட் பைப்பில் கூட மாணிக்கங்களை பதித்து இருந்தார். விலை உயர்ந்த இயற்கை முத்துக்கள் பதிக்கப்பட்ட இவரது நெக்லஸ் மிகவும் புகழ்பெற்றது. அழகுராணியாக திகழ்ந்த இவரது புகைப்படங்கள் அடிக்கடி பேஷன் பத்திரிகைகளின் அட்டைகளை அலங்கரித்தன.
திருமணம் முடித்தபின் மொனாக்கோவுக்கு தப்பி ஓடிய இவர்கள், அரசு கருவூலத்தில் இருந்த விலை உயர்ந்த ஆபரணங்களையும் அள்ளிச்சென்றனர். இந்த கொள்ளை விவகாரம் இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் படேலுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களது திருமணம் 1956–ல் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் சீதா தேவி லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். தனது நகைகள் அனைத்தையும் அவரே வைத்திருந்தார். தனக்கு பணத்தேவை ஏற்பட்ட போதெல்லாம் அவற்றை விற்று செலவழித்தார். அதில் சீதாவின் கொலுசுகளில் இடம்பெற்று இருந்த மரகத கற்களால் தயாரிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை இங்கிலாந்து இளவரசி வாங்கி இருந்தார்.
இதை அணிந்து கொண்டு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றதை பார்த்த சீதா, ‘எனது காலை அலங்கரித்த மரகதங்கள் உங்கள் கழுத்துக்கு பொருத்த மாக இருக்கின்றன’ என்று கூறினார்.
இதனால் முகம் வாடிய இளவரசியோ, அந்த நெக்லசை தான் வாங்கிய கடையிலேயே திரும்ப கொடுத்துவிட்டார்.
கன்னிமாரா பிரபுவின் களியாட்டம்
மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக கடந்த 1886–90 காலகட்டத்தில் பணியாற்றியவர் ராபர்ட் போர்க். கன்னிமாராவின் முதல் பிரபுவான இவரது பதவிக்காலத்தில்தான் சென்னையின் அடையாளமாக விளங்கும் கன்னிமாரா நூலகம், ஐகோர்ட்டு கட்டிடம் மற்றும் விக்டோரியா தொழில்நுட்ப நிறுவனம் போன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டன.
ரெயில்வே வளர்ச்சித் திட்டங்கள், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்ட விதத்தில் அனைத்து தரப்பாலும் பாராட்டப்பட்ட இவர், வைசிராய் டல்ஹவுசியின் மகள் சூசனை திருமணம் செய்திருந்தார். அந்தக் காலத்தில் ஒருநாள் வெளியூர் பயணத்தில் ஈடுபட்டு இருந்த கன்னிமாராவின் முதல் குடிமகளான சூசன், திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
அப்போது தனது கணவரும், கன்னிமாராவின் பிரபுவுமான ராபர்ட் போர்க், உள்ளூர் மற்றும் ஐரோப்பிய பெண்கள் சிலருடன் களியாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததைக் கண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சூசனுக்கு, அந்த விருந்து நிகழ்ச்சியை நடத்தியது ராபர்ட்டின் மருமகளான ஈவ்லின் என தெரியவந்தது. அவருக்கும், சூசனுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் தனது கணவர் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டது, அவரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. உடனே கவர்னர் மாளிகையை காலி செய்து கன்னிமாரா ஓட்டலுக்கு திரும்பிய சூசன், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு செய்தார்.
இந்த வழக்கில் ராபர்ட் சார்பில் ஆஜராக எந்த வக்கீலும் முன்வரவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சூசனின் வக்கீல்கள், 1890–ல் அவருக்கு லண்டன் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றுத் தந்தனர். தனது சிற்றின்ப நாட்டத்தால் மனைவியையும், பதவியையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார், கவர்னர் ராபர்ட் போர்க்.
திருடப்பட்ட கொல்லூர் வைரம்
ஆந்திராவின் கொல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட கோகினூர் வைரத்தை இங்கிலாந்து அபகரித்தது போல மற்றொரு அரிய வகை கொல்லூர் வைரத்தையும் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் கொள்ளையடித்தது மதராசை பரபரப்புக்கு உள்ளாக்கியது.
தற்போது பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ள இந்த நீலநிற 141 காரட் வைரத்தின் வரலாறு பெரிது.
கொல்லூரில் உள்ள சுரங்கத்தில் இருந்து 1698–ம் ஆண்டு அடிமை ஒருவர் இந்த வைரத்தை கண்டெடுத்தார். பட்டை தீட்டாமல் 410 காரட் எடையில் இருந்த இந்த வைரத்தை தனது காலில் இருந்த பெரிய புண்ணில் மறைத்து எடுத்து வந்தார். அவரிடம் இருந்து இந்த வைரத்தை திருடிய ஆங்கிலேய கப்பல் கேப்டன் ஒருவர், சுறா மீன்கள் நிறைந்த தண்ணீரில் அதை வீசி எறிந்தார்.
பின்னர் பலர் கைகளுக்குச் சென்ற இந்த வைரம், மெட்ராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கவர்னராக இருந்த தாமஸ் பிட்டின் கைகளுக்கு வந்தது.
பிரபல வைர வியாபாரியான ஜாம்சந்திடம் இருந்து 48 ஆயிரம் பகோடாவுக்கு (நாற்பத்தைந்து பணம் மதிப்புடைய தங்க நாணயம். வராகன் என்றும் அழைக்கப்படும்) இந்த வைரத்தை அவர் வாங்கினார்.
ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த வைரத்தை அவர் அபகரித்துக் கொண்டதாகவே இந்தியாவிலும், இங்கிலாந்திலும் அப்போதே பேச்சு கிளம்பியது. இதை பிரபல ஆங்கில கவிஞர் அலெக்சாண்டர் போப் தனது கவிதையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வைரத்தை பின்னர் பிரான்ஸ் நாட்டு அரச குடும்பம் வாங்கியது. இந்த வைரம், அதை வைத்திருப்போருக்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்ற பேச்சு உண்டு.
நெப்போலியன் மற்றும் பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய பிரான்சின் கடைசி ராணி மேரி அன்டொய்னெட் ஆகியோர் இதற்கு உதாரணம்.
ஆனால் தாமஸ் பிட்டுக்கு மட்டும் இந்த வைரம் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது. இந்த வைரத்தை விற்றதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணம் மட்டுமின்றி, இங்கிலாந்தில் ஆட்சியதிகாரத்தை பிடிக்கும் அளவுக்கு அந்த குடும்பம் உயர்ந்தது.
இங்கிலாந்தின் வலிமையான பிரதமர்களான வில்லியம் பிட் மூத்தவர் மற்றும் வில்லியம் பிட் இளையவர் ஆகியோர் முறையே தாமஸ் பிட்டின் பேரன் மற்றும் கொள்ளுப்பேரன் ஆவர்.
மந்தைவெளி ‘திகில்’ அரண்மனையில் மகாராஜாவின் ஆவி
விஜயநகர ஜமீனுக்கு அரசராக இருந்த அலக் நாராயண கஜபதிக்கு சொந்தமான அரண்மனை ஒன்று, மந்தைவெளி நோர்ட்டன் சாலையில் அடையாறு கால்வாய்க்கு அருகே இருந்தது. 1922 முதல் 1937 வரை மகாராஜாவாக இருந்த இவர், இமாசல பிரதேசத்தை சேர்ந்த வித்யாவதியை திருமணம் செய்தார்.
பஞ்சாபி மொழி பேசும் வித்யாவதியால் விஜயநகர அரச குடும்பத்துடன் முழுமையாக ஒட்ட முடியவில்லை. எனவே குடும்பத்தினரை விட தனது நண்பர்களுடனேயே அதிக நேரத்தை செலவிட தொடங்கினார். அதில் ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில் விஜயநகர அரசை கைப்பற்ற திட்டமிட்டார்.
இதற்காக தனது கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பட்டம் சூட்டினார், ராணி வித்யாவதி. அத்துடன் குழந்தைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ராணி, அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதற்காக மும்பையில் இருந்து லண்டன் செல்லும் கப்பலில் ஏற்றியிருந்தார்.
ஆனால் இது பற்றி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராஜா அலக் நாராயண கஜபதி, தனது வக்கீல்களின் அறிவுறுத்தலின் பேரில் தானே ஆஜராகி வாதாடினார். தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதை கோர்ட்டில் நிரூபித்த அவர், தனது குழந்தைகளையும் தன்னுடனே வைத்திருக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட சுப்பாராவ், மும்பையில் இருந்து ராணியின் குழந்தைகளுடன் புறப்பட தயாராக இருந்த கப்பலின் பயணத்தை நிறுத்துமாறு கேப்டனுக்கு உத்தரவிட்டார். அப்படி கப்பலை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது, இந்திய கோர்ட்டு வரலாற்றில் அதுவே முதல் முறையாகும்.
இப்படி வழக்கில் வெற்றி பெற்றிருந்தாலும் சில நாட்களிலேயே மந்தைவெளி அரண்மனையின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து அலக் நாராயண கஜபதி மரணமடைந்தார்.
பின்னாளில் அவரது ஆவி அந்த அரண்மனையில் உலவுவதை கண்டதாக பலர் ‘திகில்’ கிளப்பியதை தொடர்ந்து, ராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
பின்னர் அந்த அரண்மனை சினிமா படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
கொலை வழக்கால் ஒளி இழந்த நட்சத்திரம்
வசீகரிக்கும் அழகு, ஸ்டைல், இசைஞானம் போன்ற திறமைகளால் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் தியாகராஜ பாகவதர். 1944–ம் ஆண்டு அவரது ஹரிதாஸ் திரைப்படம் வெளியாகி உச்சம் தொட்டது. ஒரே தியேட்டரில் ஆண்டுக்கணக்கில் ஓடி சாதனை புரிந்த அந்த திரைப்படம் 3 தீபாவளிகளை கண்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹரிதாஸ் வெளியான அதே 1944–ல் தான் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் விதியும் விளையாடியது.
‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
புகழின் உச்சியில் இருந்த தியாகராஜ பாகவதர், இந்த கைதுக்குப்பின் திரையுலகில் பின்னடைவை சந்தித்தார். கிடப்பில் போடப்பட்டதும், பிற நடிகர்களின் கைகளுக்கு சென்றதுமாக சுமார் 10 படங்கள் பாகவதரை விட்டுச் சென்றன.
1945–ம் ஆண்டு உலக பத்திரிகைகள் அனைத்தும் ஹிட்லரின் மறைவுச் செய்தியை வெளியிட, தமிழ் பத்திரிகைகளோ, ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் குற்றவாளி’ என்ற செய்தியைத்தான் தலைப்பு செய்தியாக தாங்கி வந்தன.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், பின்னர் லண்டனில் உள்ள கோர்ட்டில் அப்பீல் செய்து விடுதலையானாலும், சுமார் 2½ ஆண்டுகளை சிறையில் கழிக்க நேரிட்டது.
சிறையில் இருந்து விடுதலையானபோது தமிழ் திரையுலகம், பாடும் திறன் பெற்ற நடிகர்களிடம் இருந்து பேசும் (வசனம்) திறன் கொண்ட நடிகர்களின் கைக்கு மாறியிருந்தது.
பாகவதரின் நடிப்பையும் திரையுலகம் மறந்துவிட்டது. எனவே நண்பர்கள் உதவியுடன் படங்களை தயாரித்தார். அதுவும் அவருக்கு சிறப்பாக வாய்க்கவில்லை. பணம், புகழ் என உச்சியில் இருந்த அந்த உச்ச நட்சத்திரம் இறுதியில் ஏழையாகவே மறைந்தது.

Related Tags :
Next Story