முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிக்கு பாறாங் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து


முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிக்கு பாறாங் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 3 Sept 2018 4:15 AM IST (Updated: 2 Sept 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிக்கு பாறாங் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஜீயபுரம்,

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மதகுகள் உடைந்த பகுதி வழியாக தண்ணீர் வெளியேறி செல்வதை தடுக்க மணல் மூட்டைகள், பாறாங் கற்களை கொண்டு அடைப்புகள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளில் இருந்து லாரிகள் மூலம் பாறாங் கற்கள் கொண்டு வரப்படுகிறது.

இந்த லாரிகள் ஸ்ரீரங்கம் மேலூர் வழியாக காவிரி ஆற்றின் வடகரை பகுதியாக முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வருகிறது. இந்த பாதை மண் சாலை பகுதியாகும். இந்த நிலையில் நேற்று கரூர் பகுதியில் இருந்து பாறாங் கற்கள் ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சீரமைப்பு பணி மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் விரைந்து சென்றனர். மேலும் சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகலப்படுத்தி மற்ற லாரிகள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தனர். கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான லாரி டிரைவரின் பெயரை அங்கிருந்தவர்கள் யாரும் தெரிவிக்கவில்லை.

சீரமைப்பு பணிகள் தடைபெறாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். மண் சாலை சரி செய்யப்பட்ட பின் லாரிகள் வரிசையாக கொள்ளிடம் அணைப்பகுதிக்கு வந்தன. அணையில் கற்களை இறக்கிய பின் கொள்ளிடம் மேலணையில் காவிரி அணைப்பகுதி வழியாக வெளியே சென்றன. ஸ்ரீரங்கம் மேலூர் வழியாக காவிரி வடகரையில் கனரக வாகனங்கள் வருவதால் அந்த பாதையில் உள்ள வண்ணத்துபூச்சி பூங்கா மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story