முதல்–அமைச்சர் பதவிக்கு நான் முயற்சித்ததாக ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் பேசுகிறார் டி.டி.வி.தினகரன் பேட்டி
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது முதல்–அமைச்சர் பதவிக்கு நான் முயற்சித்ததாக ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் பேசுகிறார் என்று, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
தஞ்சாவூர்,
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது நான் முதல்–அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் பேசியது குறித்து கேட்கிறீர்கள். அவர் பேசியதை நானும் கவனித்தேன். இதற்கு காரணம் விரக்தி மனப்பான்மை. மனநலம் பாதிக்கப்பட்டது போன்று அவர் பேசுகிறார்.
அவர் பேசியதில் எவ்வளவு உண்மை என்பது தமிழக மக்களுக்கு தெரியும். ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறியில் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியும். அவர் இந்த ஆட்சியை காப்பாற்ற தி.மு.க.வுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்தேன் என்று சொல்கிறாரா? அல்லது டெல்லியில் இருந்து உத்தரவு வந்தவுடன் ஊழல் ஆட்சி என்று கூறிய இந்த ஆட்சியில் கைகோர்த்து கொண்டு துணை முதல்–அமைச்சராக இருக்கிறார். அவருடைய நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக உள்ளது.
இவர் சதி செய்தார், அவர் சதி செய்தார் என்பதை யாரும் நம்பமாட்டார்கள். அவருடைய மனைவி கூட நம்பமாட்டார். அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி எல்லாம் எனக்கு தெரியும். பன்னீர்செல்வம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.
கடைமடை பகுதிக்கு தண்ணீர்வரவில்லை எனக்கூறி மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். கடைமடை பகுதிக்கு தண்ணீர்வராததை கண்டித்து நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆகஸ்டு மாதம் 19–ந்தேதியே மேலூர் கூட்டத்திலேயே அறிவித்தோம். இந்த அரசு தூர்வாருகிறது என்ற பெயரில் ரூ.400 கோடியை முறைகேடு செய்துள்ளனர் என்பதை கண்டித்து விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறோம் என்று அறிவித்தோம். அதன்படி நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.