அரசு பஸ்சில் ‘விருப்ப டிக்கெட் செல்லாது’ என்றதால் வழக்கு: பயணிக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
அரசு பஸ்சில் விருப்ப டிக்கெட் செல்லாது என்றதால் பயணி தொடரப்பட்ட மனு விசாரணையில் பயணிக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த வக்கீல் செல்வராஜ், மதுரை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த 18.8.2015 அன்று மதுரை மாநகர அரசு பஸ்களில் ஒரு நாள் முழுவதும் விருப்பம் போல பயணம் செய்வதற்காக ரூ.50 கட்டணம் (தற்போது இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது.) செலுத்தி பயணச்சீட்டு பெற்றேன். அன்று பணி நிமித்தமாக ராஜபாளையம் கோர்ட்டுக்கு சென்றுவிட்டு, இரவு 11 மணியளவில் திருமங்கலம் வந்தேன். அங்கிருந்து அன்று இரவு 11 மணியளவில் பெரியார் பஸ்நிலையம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினேன். அது இரவு சர்வீஸ் பஸ் என்றும், அந்த பஸ்சில் ஒரு நாள் விருப்பம் போல பயணம் செய்வதற்கான ரூ.50 டிக்கெட் செல்லாது என்று கூறி, ரூ.17–ஐ வசூலித்துவிட்டார். டிக்கெட் எடுக்காவிட்டால் பஸ்சை விட்டு கீழே இறங்க நேரிடும் என்றும் கூறினார். இது சட்டவிரோதம். சேவைக்குறைபாடு ஆகும். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், மனுதாரர் குற்றச்சாட்டுக்கு எதிராக போதிய ஆதாரங்களுடன் அரசு போக்குவரத்துக்கழகம் நிரூபிக்கவில்லை. எனவே அவருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீட்டையும், டிக்கெட் கட்டணம் ரூ.17–ஐயும் அரசு போக்குவரத்துக்கழகம் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.