மீனவர்களின் வலையில் சிக்கிய அபூர்வ நட்சத்திர மீன்: சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்
பாம்பனில் மீனவர்களின் வலையில் சிக்கிய அபூர்வ நட்சத்திர மீன்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாக விளங்கி வருகிறது. அது போல் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகளும், பவளப் பாறைகளும் அதிக அளவில் உள்ளதால் இந்த கடல் பகுதியில் பல வகை அபூர்வ மீன்கள் உள்ளன. இந்தநிலையில் பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு நாட்டுப் படகில் 5 மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். அதில் மீனவர்களின் வலையில் அபூர்வ நட்சத்திர மீன் ஒன்று சிக்கியிருந்தது. இறந்த நிலையில் கிடந்த அந்த நட்சத்திர மீனை மீனவர்கள் கடற்கரையில் வீசி விட்டு சென்றனர். கடற்கரையில் கிடந்த அந்த நட்சத்திர மீனை கையில் எடுத்து வைத்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், கல்லூரி மாணவிகளும் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து செல்போனில் படம் எடுத்து சென்றனர். மேலும் சுற்றுலா பயணிகளில் ஒருவர் அந்த நட்சத்திர மீனை வீட்டிற்கு எடுத்து சென்றார்.
நட்சத்திர மீன் பற்றி கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது;–
நட்சத்திர மீன்கள் (ஸ்டார்பிஸ்) தடை செய்யப் பட்ட மீன்கள் கிடையாது. இந்தியாவில் லட்சத்தீவு கடல் பகுதியில் தான் அதிக அளவில் அபூர்வ நட்சத்திர மீன்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தான் நட்சத்திர மீன்கள் அதிகமாக உள்ளன. நட்சத்திர மீன்களை கடலில் பார்ப்பது அரிது. இந்த மீனை உணவாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கடலுக்குள் உள்ள சிறிய மீன்களை தின்று வாழ்ந்து வரும் நட்சத்திர மீனின் மேல் பகுதியில் உள்ள கூர்மையான முட்கள் விஷத் தன்மை கொண்டவையாகும்.
அதனால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் வலையில் நட்சத்திர மீன்கள் சிக்கினால் மீனவர்கள் அந்த அபூர்வ மீனை கடலுக்குள் விட்டு விடுவார்கள். தண்ணீரை விட்டு எடுத்த சிறிது நேரத்தில் நட்சத்திர மீன்கள் இறந்து விடும். அபூர்வ நட்சத்திர மீன்கள் வீடுகளில் அலங்கார பொருட்களாகவும், மீன் தொட்டியிலும் வைக்கப்பட்டு வருகின்றன. கடலில் உள்ள பவளப் பாறைகளிலும், பாறைகள் உள்ள இடங்களிலும் தான் நட்சத்திர மீன்களை அதிக அளவில் பார்க்க முடியும். மீனவர்கள் வலையில் சிக்கும் நட்சத்திர மீனை கடலில் விட்டு விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.