105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது


105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 3 Sept 2018 3:00 AM IST (Updated: 3 Sept 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

பெங்களூரு, 

105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. பகல் 1 மணிக்குள் அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல்

கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67.51 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கலபுரகி, சாம்ராஜ்நகர் ஆகிய 2 மாவட்டங்களில் 2 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மொத்தம் 2,633 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சிகளில் அதன் தலைநகரிலும், தாலுகா தலைநகரங்களிலும் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று ஓட்டு எண்ணிக்கை

இந்த நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று(திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பகல் 1 மணிக்குள் முடிவுகள் அனைத்தும் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிட்டு உள்ளன.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் வெளியான பிறகு வார்டுகளின் பலத்தின் அடிப்படையில் தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பது என்று அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Next Story