சென்னை குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ.61½ லட்சத்தில் பூங்கா விரைவில் திறக்கப்படும்


சென்னை குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ.61½ லட்சத்தில் பூங்கா விரைவில் திறக்கப்படும்
x
தினத்தந்தி 3 Sept 2018 3:15 AM IST (Updated: 2 Sept 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ.61 லட்சத்து 44 ஆயிரத்தில் அம்ருத் திட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பல்லாவரம் நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 73 லட்சத்தில் 16 பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் 15 பூங்கா பணிகள் முடிந்துவிட்டது. ஒரு பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. முடிக்கப்பட்ட 15 பூங்காக்களில், 14 பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது.

குரோம்பேட்டை நாயுடுஷாப் சாலையில் பல்லாவரம் நகராட்சி சார்பில் ரூ.61 லட்சத்து 44 ஆயிரத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள புதிய பூங்கா, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

இயற்கை எழில்கொஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா சுவர்களில் அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. பச்சைபசேல் என்ற புல்வெளிகள், மூங்கிலால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை, சிறுவர்கள் விளையாட விளையாட்டு சாதனங்கள், முதியவர்கள் அமர வளைவு இருக்கைகள், நடைபயிற்சி செல்லும் பாதை, உடல் நலத்தை காக்க 8 வடிவ நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது.

பூங்கா முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதி, இரவில் பூங்காவின் அழகை மெருகேற்றும் வண்ண விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன் பூங்காவுக்கு வரும் சிறுவர்களை மகிழ்விக்க, சத்தம்போடும் மிகப்பெரிய செயற்கை டைனோசர், முட்டையில் இருந்து வெளியே வரும் டைனோசர் குட்டி மற்றும் மேலும் ஒரு சிறிய டைனோசர் என தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு நவீன வசதிகளுடன், கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை விரைவில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து பல்லாவரம் நகராட்சி பொறியாளர் கருப்பையா ராஜா கூறியதாவது:– பல்லாவரம் நகராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தில் 16 பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டு, 15 பூங்கா பணிகள் முடிந்து விட்டது. பணிகள் முடிந்து திறக்கப்பட்ட பூங்காக்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

குரோம்பேட்டை பத்மநாபா நகரில் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. குரோம்பேட்டை நாயுடுஷாப் சாலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள அழகிய பூங்காவில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. விரைவில் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story