மாதிரவேளூரில் நெல் கொள்முதல் நிறுத்தம் 4,000 நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம்


மாதிரவேளூரில் நெல் கொள்முதல் நிறுத்தம் 4,000 நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம்
x
தினத்தந்தி 2 Sep 2018 11:00 PM GMT (Updated: 2 Sep 2018 6:37 PM GMT)

கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு வாரமாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் 4,000 நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் கடந்த 25 வருடங்களாக நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சம்பா நெற்பயிர் அறுவடையின் போது மட்டும் இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மாதிரவேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட விவசாயிகள் குறுவை நெற்பயிர் அதிக அளவு சாகுபடி செய்துள்ளதால் குறுவை நெல்லை சாகுபடி செய்யக்கோரி, நெல்கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாதிரவேளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக, நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, முதன் முதலில் குறுவை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாதிரவேளூரில் நெல் கொள்முதல் செய்வது திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் விவசாயிகள் கொண்டு சென்ற 4,000 நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால், மூட்டைகளில் உள்ள நெல் சேதமடைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாதிரவேளூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

நாங்கள்(விவசாயிகள்) மிகவும் கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு எடுத்து வந்தோம். தற்போது திடீரென நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனர். இதனால் மழைநீரில் நெல்மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. நெல் மூட்டைகளை வாங்க சணல் சாக்கு பைகள் இருப்பு இல்லை என்றும் கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை எடுத்து செல்ல லாரிகளும் வரவில்லை என்ற காரணத்தை கூறி ஒரு வார காலமாக நெல்கொள்முதல் நடைபெறவில்லை. நாங்கள் இன்னும் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய தயாராக உள்ளோம். இந்நிலையில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story