கோவில்கள், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்


கோவில்கள், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2018 3:30 AM IST (Updated: 3 Sept 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கோவில் கள் மற்றும் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை,

மகாவிஷ்ணு ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணராக அவதரித்தார். அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதன்படி, நேற்று கிருஷ்ணஜெயந்தி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பெண்கள் தங்களது வீடுகளின் வாசலில் மாவிலை தோரணங்களை கட்டி, குழந்தைகளின் கால்களை மாவில் முக்கி கிருஷ்ண பாதச்சுவடு மாக்கோலம் போட்டனர். இந்த மாக்கோலத்தின் மூலம் கிருஷ்ணரே தங்கள் வீட்டுக்குள் வருவதாக பக்தர்கள் கருதுவார்கள்.

மேலும், தங்கள் வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை வைத்து மலர்களால் அலங்கரித்து, கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், தயிர், பால், அவல், சீடை, முறுக்கு மற்றும் பழங்களை படைத்து வழிபட்டனர். சிறுவர், சிறுமிகள் ராதை-கிருஷ்ணன் வேடங் களை அணிந்து வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

இதேபோல் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று கோவில்களிலும் வழிபாடு நடந்தது. குறிப்பாக சென்னை எழும்பூர் கிருஷ்ணன் கோவில், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட வைணவ கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களுக்கு உறியடி மற்றும் வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை மற்றும் திருவான்மியூர், பெரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்கான் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், திருவான்மியூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பலராமர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீகிருஷ்ண-பலராமர் சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்தனர்.

இரவு நடைபெற்ற அபிஷேகத்தின் போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு ஸ்ரீகிருஷ்ண-பல ராமரை வழிபட்டார்.

Next Story