பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது
பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெருந்துறை,
பெருந்துறை அருகே சென்னிமலை ரோட்டில் உள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த அப்துல் அலி (வயது 30) என்பதும், அவர் பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்காள மாநில வாலிபர் ஆயினூர் (30) என்பவரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் கைது செய்தார்.
மேலும் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரபீக், பணிக்கம்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்காள மாநில வாலிபர் ஷோசரப்காஜு (33) என்பவரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் தலா 500 கிராம் கஞ்சா என மொத்தம் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.