விபத்து காட்சிகளை முகநூலில் பதிவிட்டதால் தகராறு: சலூன் கடை சூறையாடல்; ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்


விபத்து காட்சிகளை முகநூலில் பதிவிட்டதால் தகராறு: சலூன் கடை சூறையாடல்; ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் விபத்து காட்சிகளை முகநூலில் பதிவிட்டதால் நடந்த தகராறில் சலூன் கடை சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் பயணியர் மாளிகை எதிரே வன்மீகநாதன் (வயது38) என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய கடைக்கு அருகே மோட்டார் சைக்கிள் மோதி கமலம் என்ற பெண் உயிரிழந்தார். இந்த விபத்து வன்மீகநாதனின் சலூன் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த பதிவை பேராவூரணியை சேர்ந்த உதயகுமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வன்மீகநாதனின் கடைக்கு வந்த சிலர், விபத்து குறித்த வீடியோ பதிவை உதயகுமாரிடம் ஏன் கொடுத்தாய்? என கேட்டு அவரிடம் தகராறு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோடரி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கடையை அடித்து நொறுக்கி, கடையை சூறையாடினர். இதில் கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து பேராவூரணி போலீசில் வன்மீகநாதன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாவடுக்குறிச்சியை சேர்ந்த வக்கீல் வெங்கடேஷ்வர், நாட்டாணிக்கோட்டையை சேர்ந்த பைசல் ஆகிய இருவரும் சலூன் கடைக்கு சென்று வன்மீகநாதனை மிரட்டி சென்றதும், அதைத்தொடர்ந்து பைசல், பேராவூரணியை சேர்ந்த முத்துப்பாண்டி, பொன்காடு பகுதியை சேர்ந்த சந்துரு உள்ளிட்டோர் சலூன் கடையை சூறையாடியதும் தெரியவந்தது. இதுகுறித்து பேராவூரணி போலீசார் வக்கீல் வெங்கடேஷ்வர், பைசல், முத்துப்பாண்டி, சந்துரு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story