காரில் கொண்டு சென்ற ரூ.1 கோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கின, 4 பேரிடம் போலீசார் விசாரணை
மதுரை அருகே காரில் கொண்டுசென்ற ரூ.1 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை,
மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காரில் கடத்திச்செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கருப்பாயூரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வரிச்சியூர் பகுதி வழியாக ஒரு கார் வந்தது. போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் பதற்றமடைந்தனர். போலீசார் காரின் பின்புறத்தில் இருந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என தெரிகிறது.
காரில் இருந்த பரமக்குடி நவீன்சக்தி, திருப்பாச்சேத்தி ராஜசேகர், தர்மா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், மேலூரை சேர்ந்த சரவணன் என்பவர் இந்த பணத்தை கொடுத்து அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சரவணன் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பிவைக்கும் நிறுவனத்தை மேலூரில் நடத்தி வருகிறார். மேலூர் சென்ற தனிப்படை போலீசார் சரவணனையும் விசாரணைக்காக அழைத்துவந்தனர். அவர்கள் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் முடிவில் தான் பணம் எங்கு, எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.