மாணவர் சேர்க்கையில் விதிமீறல்: புதுவை தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீசு
மாணவர் சேர்க்கையில் விதிகள் மீறப்பட்டு இருப்பதாக கூறி விளக்கம் கேட்டு புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு சுகாதாரத்துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் (2018–19) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இடங்களை 100–ல் இருந்து 150 ஆக உயர்த்த அனுமதி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 28–ந் தேதி உத்தரவிட்டது.
இந்த கல்வியாண்டில் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக உயர்த்தப்பட்ட 50 இடங்களில் 33 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும், 17 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு முறைப்படி நிரப்ப புதுவை அரசின் சென்டாக் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் சென்டாக் விதிமுறைகளை மீறி பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடந்ததாக பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரியில் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. தலைமையில் மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்தினார்கள். மேலும் சென்டாக் அதிகாரிகளிடமும் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்டாக் வழிகாட்டுதலை மீறி பிம்ஸ் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறி இருப்பதாவது:–
இந்த கல்வி ஆண்டு மட்டும் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களை நிரப்பிக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. கூடுதலாக பெறப்பட்ட 50 இடங்களில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் சென்டாக் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது. விதிகளை மீறியதற்காக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். கல்லூரி நிர்வாகம் மீது புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.