பாளையங்கோட்டையில் போலீஸ் வேலைக்கு உடல் திறன் தேர்வு ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு


பாளையங்கோட்டையில் போலீஸ் வேலைக்கு உடல் திறன் தேர்வு  ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:00 AM IST (Updated: 3 Sept 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் போலீஸ் வேலைக்கு உடல் திறன் தேர்வு நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் போலீஸ் வேலைக்கு உடல் திறன் தேர்வு நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

போலீஸ் வேலை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2–ம் நிலை போலீசார் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 11–ந்தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் திறன் தேர்வு 6 நாட்கள் நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் 2,003 ஆண்களும், 805 பெண்களும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு உடல் திறன் தேர்வு, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றது.

முதல் நாளில் 1000 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி ஏராளமான இளைஞர்கள் நேற்று அதிகாலையிலேயே ஆயுதப்படை வளாகத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

உடல் திறன் தேர்வு

அவர்களுக்கு முதலில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, உயரம், எடை, மார்பளவு ஆகியவை அளக்கப்பட்டது. அதை தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்ட திறன் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி உடையவர்கள் மற்றும் ஓட்டத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்கை அடைந்தவர்கள் தேர்ச்சி பெற்றனர். மற்றவர்கள் உடனுக்குடன் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் அடுத்த கட்டமாக நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

இதுதவிர இன்று (திங்கட்கிழமை) 1003 இளைஞர்களுக்கும், நாளை 805 பெண்களுக்கும் உடல் திறன் தேர்வு நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வை போலீஸ் பயிற்சி பள்ளி ஐ.ஜி. பாஸ்கரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் நேரடியாக கண்காணித்தனர். இதையொட்டி ஆயுதப்படை மைதானத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story