சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்கப்படவில்லை என்று கூறி திருப்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
சலுகை பயணச்சீட்டு வழங்கப்படவில்லை என்று கூறி திருப்பூர் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில மாநாடு திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டனர். பின்னர் இரவு மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது ஏராளமான மாற்றுத்திறனாளிகள் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 8 மணிக்கு வரும் கோவை–நாகர்கோவில் ரெயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையம் சென்றனர்.
பின்னர் அவர்கள் டிக்கெட் கவுண்ட்டருக்கு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலையில் பயணச்சீட்டு கேட்டுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் ரெயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2–வது நடைமேடையில், அவர்கள் செல்ல இருந்த கோவை–நாகர்கோவில் ரெயில், தண்டவாளபகுதியில் வந்தடைந்தது. உடனடியாக தண்டவாளப்பகுதிக்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ரெயிலில் ஏறி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலை பயணச்சீட்டு வழங்கப்படாதது குறித்து ரெயில்நிலைய டிக்கெட் கவுண்ட்டரை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.