அரசு கொள்முதல் நிலையங்களை மூடினால் நெல்லை குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்குவார்கள் - விவசாயிகள் குமுறல்


அரசு கொள்முதல் நிலையங்களை மூடினால் நெல்லை குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்குவார்கள் - விவசாயிகள் குமுறல்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

அரசு நெல் கொள்முதல் நிலையங்களை மூடினால் வியாபாரிகள் நெல்லை குறைந்த விலைக்கே வாங்குவார்கள் என்று விவசாயிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அலங்கியத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பாசனம், பி.ஏ.பி. பாசனம், எல்.பி.பி. பாசனம் மற்றும் கிணற்று பாசனம் மூலம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், வெள்ளகோவில், பொங்கலூர் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை, மழையின் அளவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் சாகுபடியின் அளவும் குறைந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 24 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சம்பா, குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை சாகுபடி மிகவும் குறைவுதான். இந்த விவசாய நிலங்களில் இருந்து பெறப்படும் நெல்களை கொள்முதல் செய்வதற்கு என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நிரந்தரமான கொள்முதல் நிலையங்கள் எதுவும் இதுவரை இல்லை.

செப்டம்பர் மாதத்தில் பயிரிடப்படும் நெல் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இந்த அறுவடை செய்யப்படும் காலங்களில் இருந்து ஓரிரு மாதங்கள் மட்டுமே குறிப்பிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படும். தற்போது நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம் போல் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல்லை கொள்முதல் செய்யவேண்டும். இல்லை என்றால் வியாபாரிகள் நெல்லை குறைந்த விலைக்கே வாங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முத்தூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவடிவேல் கூறியதாவது:-

முத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி அறுவடை காலங்களில் மட்டும் தற்காலிக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். அறுவடை பணி முழுமையாக முடிவடைந்து அந்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் பணிகள் முடிவடைந்த பின்னர் அவை மூடப்பட்டு விடும்.

கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் முடிவடைந்த பின்பும், இந்த பகுதி விவசாயிகள் கீழ்பவானி கால்வாய்களில் இருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம் மீண்டும் பல பகுதிகளில் நெல் சாகுபடி செய்கின்றனர். அவற்றை வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டிய நிலை உள்ளது. மேலும், அரசு நெல் கொள்முதல் மையங்களில் குண்டு ரகம் மற்றும் சன்ன ரகம் நெல்கள் அனைத்தையும் அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கே விவசாயிகள் விற்று பயனடைய முடியும்.

இதனால் நெல் சாகுபடி விவசாயிகள் முழுமையாக பயனடைவார்கள். ஆனால் வெளி நெல் வியாபாரிகள் ஐ.ஆர்.20, கோ 51 ஆகிய குறிப்பிட்ட நெல்களை மட்டுமே அதுவும் குறைந்த விலைக்கே வாங்குவார்கள். இதனால் நெல் விவசாயிகளுக்கு நெல்லுக்கான உரியவிலை கிடைப்பதில்லை.

எனவே ஆண்டு முழுவதும் திருப்பூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி நடைபெறும் பகுதிகளில் நெல் கொள்முதல் மையங்கள் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனைமலை அருகே உள்ள ஒடுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பரமசிவம் என்பவர் கூறியதாவது:-

ஆனைமலை வட்டாரத்தில் பல ஆண்டுகளாக இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால் உரிய தண்ணீர் கிடைக்காதது, பருவம் மாறி சாகுபடி செய்வது ஆகிய காரணங்களால் நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் உரிய லாபம் இன்றி தவிக்கிறார்கள். ஆகவே அரசு நெல்லுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்து சரியான பருவத்தில் கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனைமலையை சேர்ந்த விவசாயி பட்டீசுவரன் கூறியதாவது:-

ஆனைமலையில் நெல் அறுவடை நேரத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தாமதமாக அமைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் நெல்லை வெளிமார்க்கெட்டில் தான் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதால் உரிய விலை கிடைப்பது இல்லை.ஆனைமலையில் நிரந்தரமாக கொள்முதல் மையம் இருந்தால் உரிய நேரத்தில் விவசாயிகள் விற்பனை செய்து உரிய விலை ஈட்ட முடியும். இடைத்தரகர்கள் குறுக்கீடு இருக்காது. ஆனைமலை பகுதியில் கொள்முதல் மையம் அமைக்க அரசு உரிய நடவடிககை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story