குளித்தலை தந்தை பெரியார் பாலத்தை பொறியியல் வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்


குளித்தலை தந்தை பெரியார் பாலத்தை பொறியியல் வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குளித்தலை தந்தை பெரியார் பாலத்தில் உள்ள தூண்களில் அடிப்பகுதி வெளியே தெரிகிறது. இதனால் பாலத்தை பொறியியல் வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குளித்தலை,

காவிரி ஆறு உருவாகும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை காவிரி ஆற்றில் அதிக நீளத்தில் கட்டப்பட்ட ஒரே பாலம் குளித்தலையில் உள்ள தந்தை பெரியார் பாலமாகும். கரூர் மாவட்டம் குளித்தலையையும், திருச்சி மாவட்டம் முசிறியையும் இணைக்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. குளித்தலையில் இருந்து முசிறிக்கு 1971-ம் ஆண்டுக்கு முன்பு பரிசல் மூலம் மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்துவந்தனர். பின்னர் கடந்த 1971-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதியால் இப்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 1,470 மீட்டர் நீளத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 39 லட்சம் செலவில் இப்பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த 1979-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இப்பாலம் வலுவிழந்த காரணத்தால் கடந்த 2007-ம் ஆண்டு இப்பாலத்தை மராமத்து செய்ய தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசு ரூ.2 கோடியே 94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர், லாலாபேட்டை, வதியம், குறப்பாளையம், மருதூர் ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, இக்குவாரிகள் மூலம் அதிகப்படியான மணல் காவிரி ஆற்றில் அள்ளப்பட்ட காரணத்தாலும், இப்பாலத்தின் அருகிலேயே சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளிவந்ததாலும், ஆற்றில் அதிகப்படியாக தண்ணீர் சென்றபோது ஏற்பட்ட மண் அரிப்பின் காரணத்தாலும் இப்பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களின் அடிப்பகுதி முழுவதும் வெளியே தெரியும் அளவிற்கு பள்ளமாகிவிட்டது. இப்பாலத்தின் அருகே மணல் அள்ள அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

கடந்த ஜூன் மாதம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பாலத்தின் மேல் மற்றும் அடிப்பகுதி, பாலத்தை தாங்கி நிற்கும் சிமெண்டு தூண்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களின் அடிப்பகுதியை உறுதியாக வைப்பதற்கும், மண் அரிப்பை தடுக்கும் பொருட்டும் மேற்கொள்ளவேண்டிய வழிவகைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்யவந்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் காவிரியில் அதிக அளவு தண்ணீர் வந்த காரணத்தால் தற்போது இப்பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் பலவற்றின் அடிப்பகுதி அதிக அளவு வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது. இதனால் தற்போது பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இப்பாலம் இடிந்துவிழக்கூடிய அபாயநிலையும் உள்ளது. இப்பாலத்தை சீரமைக்க பல்வேறு தரப்பினர், பொதுநல ஆர்வலர்கள், அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்பாலம் இடிந்துவிழுந்தால் குளித்தலை- முசிறி இடையே போக்குவரத்திற்கு வழியின்றி அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக பொறியியல் வல்லுனர்களை கொண்டு இப்பாலத்தை ஆய்வு செய்து பாலத்தின் உறுதித்தன்மையை மேலும் வலுப்படுத்த பாலத்தின் தூண்களின் அடிப்பகுதி முழுவதும் கான்கிரீட் அமைத்து பாலம் உடையாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story