தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மாமியார் வீட்டு முன்பு எரித்த உறவினர்கள்


தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மாமியார் வீட்டு முன்பு எரித்த உறவினர்கள்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை அவருடைய மாமியார் வீட்டு முன்பு உறவினர்கள் எரித்தனர். மேலும் தடுக்க முயன்ற போலீசாரை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது மாக்கனூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 33). விவசாயி. இவருடைய மனைவி வெண்ணிலா (28). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வெண்ணிலா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையில் வெண்ணிலாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அவருடைய உடலுடன் மாக்கனூரில் உள்ள மாமியாரின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. அதன்பின்னர் அவர்கள் பெண்ணின் உடலை வீட்டு முன்பு வைத்தனர். தொடர்ந்து வெண்ணிலாவின் சாவுக்கு மாமியார் தமிழ்செல்வி, நாத்தனார் சகுந்தலா ஆகியோர் தான் காரணம் எனவும், தற்கொலைக்கு தூண்டிய அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் அங்கேயே வெண்ணிலாவின் உடலை மரக்கட்டைகள், லாரி டயர் போட்டு எரிக்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்து, தடுக்க முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த வெண்ணிலாவின் உறவினர்கள் போலீசாரை கட்டைகளை தூக்கி எறிந்து விரட்டியடித்தனர்.

இதையடுத்து வெண்ணிலாவின் உடலில் கட்டைகள், டயர்களை அடுக்கி வைத்து மண்எண்ணெயை ஊற்றி அங்கேயே தீயிட்டு எரித்தனர். தீ சிறிது நேரத்தில் மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்களையும் உறவினர்கள் ஊருக்குள் வரவிடாமல் விரட்டியடித்தனர்.

சுமார் ¾ மணி நேரத்திற்கும் மேலாக உடல் எரிந்தது. உடல் முழுவதும் எரிந்த பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தர்மபுரி உதவி கலெக்டர் சிவன் அருளும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story