ஸ்ரீவைகுண்டம் அருகே வேன்– 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; பெண் பலி டிரைவர் உள்பட 13 பேர் காயம்


ஸ்ரீவைகுண்டம் அருகே  வேன்– 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; பெண் பலி டிரைவர் உள்பட 13 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:00 AM IST (Updated: 3 Sept 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே வேன்– 2 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பெண் பலியானார். வேன் டிரைவர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே வேன்– 2 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பெண் பலியானார். வேன் டிரைவர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

திருமண நிகழ்ச்சிக்கு...

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த நஷீர் அகமது, அவருடைய மனைவி செய்யது அலி (வயது 43) உள்பட 11 பேர் ஒரு வேனில் நேற்று காலையில் நெல்லையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பின், அதே வேனில் மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வேனை ஆழ்வார்திநகரி அருகே உள்ள மலபராயநத்தத்தை சேர்ந்த லெனின் (33) என்பவர் ஓட்டினார். வேன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் கோவையை சேர்ந்த தனிகாசலமூர்த்தி என்பவர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தார்.

பெண் பலி

அப்போது எதிர்பாராதவிதமாக கண்இமைக்கும் நேரத்தில் வேனும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளாகின. அடுத்த சில நிமிடத்தில் பின்னால் வந்த மற்றொரு கார், தனிகாசலமூர்த்தி ஓட்டிவந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 கார்களும், வேனும் பலத்த சேதமடைந்தன. இதில் வேனில் இருந்த டிரைவர் லெனின் உள்பட 11 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினர்.

மேலும், கார்களில் வந்த தனிகாசலமூர்த்தியும், இன்னொருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து ஓடிவந்தனர். அங்கு இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் இருந்தவர்களை, ஒவ்வொருவராக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஆழ்வார்திருநகரியை செய்யது அலி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 13 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஒரே நேரத்தில் வேன், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story