கொடைக்கானல் மலைப்பாதை ரோந்துக்கு புதிதாக போலீஸ் குழு


கொடைக்கானல் மலைப்பாதை ரோந்துக்கு புதிதாக போலீஸ் குழு
x
தினத்தந்தி 3 Sept 2018 3:57 AM IST (Updated: 3 Sept 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

அடுத்தடுத்து கொலைகள் நடந்ததால், கொடைக்கானல் மலைப்பாதை ரோந்துக்கு புதிதாக போலீஸ் குழு அமைக்கப்பட்டது. மேலும் வாகன சோதனை நடத்த சோதனைச்சாவடியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டனர்.

திண்டுக்கல், 


சினிமா துணை நடிகை விஷ்ணுபிரியா. இவருடன், ஏற்பட்ட தவறான உறவால் கொடைக்கானலை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அவரை, காரில் வைத்து கொலை செய்த கும்பல், அவரின் உடலை பள்ளத்தாக்கில் வீசி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், மதுரையை சேர்ந்த டீக்கடை தொழிலாளி மணிகண்டன், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கொலை செய்யப்பட்டார். நண்பர்கள் சேர்ந்து, மணிகண்டனை கொலை செய்து பள்ளத்தாக்கில் உடலை வீசி சென்றனர். அடுத்தடுத்து நடந்த 2 கொலை சம்பவங்களால் போலீசார் நிம்மதியை இழந்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். இதற்கிடையே குற்றங்களை தடுப்பதற்கு தீவிர வாகன சோதனை நடத்தும்படி கொடைக்கானல் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொடைக்கானல் மலைப்பாதையில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தியும் அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து வத்தலக்குண்டு-கொடைக்கானல் இடையே ரோந்து செல்வதற்காக, போலீஸ் ரோந்து குழு புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த போலீஸ் குழுவினர் வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து சென்று வருகின்றனர். அவ்வாறு ரோந்து செல்லும் போது நடுவழியில் சந்தேகப்படும் வகையில் வாகனங்களுடன் யாராவது நின்று கொண்டிருந்தால், உடனே விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் வாகனம் நிற்கும் இடத்தையொட்டி காட்டுப்பகுதியில் சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் வத்தலக்குண்டு காட்ரோடு சோதனைச்சாவடி வழியாக சந்தேகப்படும் வகையில் செல்லும் வாகனங்களையும் சோதனை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இதற்காக சோதனைச்சாவடியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Next Story