மக்களவை துணை சபாநாயகரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
குஜிலியம்பாறை அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜிலியம்பாறை,
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி ஆகும். இந்த தொகுதிக்கு உட்பட்ட குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, உரல்உருட்டிபட்டி, பண்ணைக்காரன்பட்டி, விராலிபட்டி, சேவகவுண்டச்சிபட்டி, கூட்டக்காரன்பட்டி, வீரக்கவுண்டன்பட்டி, சாணிப்பட்டி ஆகிய பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிராம மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சாணிப்பட்டி சென்று மக்களிடம் குறைகளை கேட்டபோது, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதனையடுத்து தம்பித்துரை மற்றும் அவருடன் வந்திருந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் ஆகியோர் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல், வான்ராயன்பட்டி கிராமத்துக்கு சென்று தம்பித்துரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
அப்போது அந்த கிராம மக்களும் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருடன் சென்ற அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் அந்த கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய, பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் செல்வராஜிக்கு தம்பிதுரை உத்தரவு பிறப்பித்தார்.
அய்யலூர் அருகே உள்ள பாலக்குறிச்சி ஆதிதிராவிடர் காலனி அருகே தம்பிதுரை சென்றபோது, அப்பகுதிமக்கள் அவரை முற்றுகையிட்டனர். அந்த பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் வழங்கவில்லை என்றும், இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தனர். இன்னும் ஒரு வாரத்தில் அந்த பகுதியில் முறையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story