குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல சென்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல சென்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல சென்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பனப்பாக்கம், 

பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம்புதூர் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 35). இவர், தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அவளூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரி என்பவரின் மகள் தமிழ்செல்வி (29) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்செல்வி தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக அவளூர் கிராமத்திற்கு வந்தார். அப்போது ஈஸ்வரி வேலைக்கு சென்று இருந்ததால் வீட்டில் தமிழ்செல்வி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த தமிழ்செல்வியிடம் மிகவும் தாகமாக இருக்கு குடிக்க தண்ணீர் தருமாறு மோட்டார் சைக்கிளில் இருந்த படியே கேட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழ்செல்வி உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அந்த நபர் தமிழ்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தமிழ்செல்வி அவளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story