சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் 629 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 629 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கருப்பூர்,
சேலம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 2018-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் விமலா ரோசலின் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் துணை பொது மேலாளர் கே.மலர்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 545 இளநிலை பொறியியல் மாணவ- மாணவிகள், 84 முதுநிலை பொறியியல் மாணவ-மாணவிகள் என மொத்தம் 629 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டப்படிப்பு முடித்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இது உங்களது வாழ்வில் ஒரு பெருமை தருகிறது. எனவே, எதிர்காலத்தில் சமூகம் சார்ந்த சிந்தனையுடன் மாணவர்கள் திகழ வேண்டும். தற்போதுள்ள தலைமுறையில் ஒரு இமாலய தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு இருக்கிறது. அதேசமயம் தொழில்நுட்பத்தில் உள்ள மாற்றங்களும் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் பழைய தொழில்நுட்பமானது அதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை என்று கூறலாம்.
தற்போது உள்ள சூழ்நிலையில் செல்போன் இல்லாத நபர்களே இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி சுயவேலைக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இப்போது பலர் புதுமையான சிந்தைகளுடன் வந்துள்ளனர். புதுமையான கருத்துகள் உலகத்தை மாற்றியமைக்கிறது. எனவே, மாணவ-மாணவிகள் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்குங்கள். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் மீது நம்பிக்கை வையுங்கள். பெற்றோர்கள், உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் காரியங்களில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு கே.மலர்மணி பேசினார். நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் விஜயன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபாராஜ்குமார், பேராசிரியர்கள் வசந்தநாயகி, கீதா, சுந்தர்ராஜ், விமலா மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story