பாலியல் பலாத்கார முயற்சியின் போது காயமடைந்த பெண் சாவு


பாலியல் பலாத்கார முயற்சியின் போது காயமடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 3 Sept 2018 3:15 AM IST (Updated: 3 Sept 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே பாலியல் பலாத்கார முயற்சியின் போது காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரவாண்டி, 


விக்கிரவாண்டி அடுத்த கப்பியம்புலியூர்-செங்கமேடு சாலையில் கடந்த 25-ந்தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலு மனைவி வள்ளி(வயது 45) என்பதும், மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்த வள்ளி சொந்த ஊருக்கு வந்தபோது மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. மேலும் வள்ளி மயங்கி கிடந்த இடத்தில் இருந்த ஒரு செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அந்த செல்போன் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த பிரபு(38) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பிரபுவை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் தனது நண்பரான புஷ்பராஜ்(34) என்பவருடன் சேர்ந்து பஸ்சுக்காக காத்திருந்த வள்ளியை சொந்த ஊரில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் கூச்சலிட்டதால், அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரபு, புஷ்பராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வள்ளி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story