சிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழி?


சிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழி?
x
தினத்தந்தி 3 Sep 2018 5:31 AM GMT (Updated: 3 Sep 2018 5:31 AM GMT)

சிறுநீரக கற்கள் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.

சிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெளியில் இருந்து வருவது. இது, உணவுப்பழக்கம், குடிதண்ணீர், வாழ்க்கை முறை போன்ற காரணிகளை உள்ளடக்கியது. இன்னொன்று உடம்புக்குள்ளேயே ஏற்படும் பாதிப்பு. இந்த முறையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பரம்பரை பரம்பரையாக சிறுநீரக கல் பாதிப்பு கடத்தப்படுவது ஆகும்.

போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக கோடை காலங்களில் வெளியில் செல்லும்போதும், அதிகபடியான வியர்வை ஏற்படும். அந்த சமயத்தில் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது மிக முக்கியம்.

வெயிலில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயிகள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், திறந்தவெளியில் நடந்து செல்பவர்கள், வெயில் காலங்களில் தாகம் தீரும் வரை தண்ணீர் அருந்துவதும் மிக மிக முக்கியம். இருதயம் பலவீனமானவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது.

ஏன் தண்ணீர் குடிப்பது முக்கியம் என்றால், சரியான அளவு குடிக்காவிட்டால் போதுமான சிறுநீர் வெளிவராது. அப்படியே வந்தாலும், சிறுநீர் மிகவும் இறுகிய திரவமாக வரும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சிறுநீரில் அளவுக்கதிகமாக கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட், பாஸ்பேட் சத்துகள் வெளியேறும். அவற்றை திரவ வடிவில் கரைத்து சிறுநீரில் வெளியேற்ற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இல்லையென்றால், சிறுநீரில் வெளியேறும் கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட் உப்புக்கள் திரவ தண்ணீரில் முழுமையாக கரைய முடியாமல் சிறுநீர் பாதையில் தங்கி படிந்துவிடும். பிறகு சிறுநீரக கல்லாக வளரும்.

பொதுவாக, சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தினுள், சிறுநீர் சேகரமாகும் பையில், சிறுநீர் வரும் பாதையில் என 3 இடங்களில் வரலாம். ஒரு சிறுநீரகத்திலும் இந்த பாதிப்பு வரலாம் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு சிறுநீரகத்திலும் வரலாம். இவை பல்வேறு அளவுகளில், பல்வேறு வடிவங்களில் வரலாம்.

சிறுநீரக கற்கள் மொத்தம் 5 வகைபடும். முதல் வகை கால்சியம் பாஸ்பேட் ஆக்சலேட் வகை கற்கள்.

இந்த வகை கற்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக உருவாகிறது. சிறுநீரக கல் நோயாளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த வகை கற்களால் தான் பாதிக்கப் படுகிறார்கள். அளவுக்கு அதிகமான கால்சியம் சத்துகள் சிறுநீரில் வெளியாவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

அதாவது, அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து மாத்திரைகள், அதிகமான வைட்டமின் டி மாத்திரைகள், ஸ்டாய்டு மருந்துகள் உண்பவர்கள், அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவோர், லிட்டர் கணக்கில் பால் அருந்துபவர்கள், கால்சியம் சத்து நிறைந்த தண்ணீரை கொதிக்க வைக்காமல் குடிப்பவர்கள் இந்த வகை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த கற்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மறுபடியும், மறுபடியும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது. நாளடைவில் அவர்களுக்கு சிறுநீரக பாதையில் கற்களால் அடைப்பும், கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது.

இத்தகைய கற்கள் உண்டாவதை தடுக்கும் சக்தி சிட்ரிக் அமிலத்துக்கு உண்டு. எலுமிச்சை, ஆரஞ்சு சாறு சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்.

இதற்கு அடுத்தபடியாக பாதிப்பை தரும் வரிசையில் யூரிக் ஆசிட் கற்களை சொல்லலாம். இந்த பாதிப்பை எக்சரே படம் மூலம் கண்டுபிடிக்க முடியாது. அல்ட்ரா ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் மூலம் தான் கண்டுபிடிக்க முடியும்.

அசைவ பிரியர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் வரும். குறிப்பாக கல்லீரல், மூளைக்கறி எனக் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவோருக்கு யூரிக் ஆசிட் கற்கள் பாதிப்பு அபாயம் எந்த நேரமும் உண்டு. சில மருந்து, மாத்திரைகளாலும் யூரிக் ஆசிட் கற்கள் வரும். பரம்பரை நோயாக கூட சிலருக்கு இந்த பாதிப்பு வருகிறது.

3-வது வகை ஆக்சலேட் கற்கள். உணவில் அதிகமாக தக்காளி, பசலைக் கீரை போன்ற சில வகை கீரைகளை அதிகம் சேர்ப்பது, சாக்லெட் சாப்பிடுவது, தேநீர் பருகுவது, முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிடுவது இந்த பாதிப்புக்கு வித்திடும்.

4-வது வகை சிஸ்டீன் கற்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு இது. அல்லது பரம்பரையாகவும் வரலாம். பெரியவர்களுக்கு அரிதாக ஏற்படும்.

5-வது வகை கற்கள் சிறுநீர் நோய் கிருமித் தாக்குதலால் வரும் இன்பெக்‌ஷன் ஸ்டோன். இது மிகவும் அபாயகரமான பாதிப்பு. ஏனெனில் இந்த பாதிப்பால் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. திரும்ப திரும்ப சிறுநீர் தொற்று வருபவர்களுக்கும் இந்த கற்கள் வரலாம். எனவே, சிறுநீர் தொற்று தானே என அலட்சியப்படுத்தக் கூடாது.

சிறுநீரக கல் பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். கடுமையான வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டின் இரண்டு புறமும் வலி அல்லது ஒருபுறம் வலி, அடி வயிறு வலி, குறிப்பாக சிறுநீர் கழிக்க செல்லும்போது வலி ஏற்படுதல் போன்றவற்றை சொல்லலாம். சில நேரங்களில் சிறுநீர் ரத்தமாகவும் போகலாம்.

சிறிய அளவிலான கற்கள் தானாகவே வெளியேறிவிடும். ஆனால், 8 மி.மீ. அளவுக்கு அதிகமான கற்கள் இருந்தால், தானாக வெளிவரும் வாய்ப்பு குறைவு. இதற்கு நிச்சயம் மருத்துவ சிகிச்சை தேவை.

மேலும், ஒரு முறை சிறுநீரக கல் ஏற்பட்டு வெளியேற்றப்பட்டாலும், அவர்களுக்கு மீண்டும் கல் வராமல் பார்த்துக்கொள்ள முறையான கண்காணிப்பு சிகிச்சை, தொடர்ந்து சில மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி வரும்.

கல் வராமல் இருக்க அல்லது கல் வந்த பிறகும் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். அசைவ உணவுப் பிரியர்கள் அளவோடு இறைச்சிகளை உண்ண வேண்டும். மீன், முட்டை சாப்பிடலாம். லிட்டர் கணக்கில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு சேர்க்கக்கூடாது.

சிறுநீர் கல் வராமல் இருக்க காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது, வெறும் தண்ணீராக மட்டுமின்றி, இளநீர், எலுமிச்சை சாறு, பழ ரசங்களாகவும் இருக்கலாம்.

டாக்டர் சவுந்தரராஜன்,
சிறுநீரக நிபுணர்

Next Story