சின்ன மாற்றங்கள் மூலம் பெரிய சாதனைகளை நிகழ்த்துவது எப்படி?
முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம்.
நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்துகொண்டால் முன்னேற்றங்களும் விரைவில்வரும், சாதனைகளையும் நிகழ்த்தலாம். மாணவர்கள் எதிர்கால சாதனையாளராக உயர இந்த உத்திகள் ரொம்பவே பயன் தரும். மாற்றங்களை காண்போமா...
வழக்கத்தை கணித்தல்
மாணவர்கள் முதலில் தங்கள் கல்வித் திட்டத்தை நன்கு வகுக்க வேண்டும். நாம் எந்த இலக்கை நோக்கி படிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இடைப் பருவ தேர்வுகளில் நாம் திட்டமிட்டபடி மதிப்பெண் பெறுகிறோமா? ஆசிரியர்களின் பாராட்டை பெறுகிறோமா? என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
அதற்காக தங்களது அன்றாட செயல்களை முதலில் பட்டியலிட வேண்டும். எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறோம். பள்ளி புறப்பாடு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எவ்வளவு நேரத்தை ஓய்வாக கழிக்கிறோம் என்பதையெல்லாம் பட்டியலிட வேண்டும். முடிந்தால் நான்கைந்து நண்பர்களாக கூட்டு சேர்ந்து கொண்டு கல்வித்திட்டம் வகுத்து செயல்படுத்தினால் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.
மாற்றத்தின் முதல் விதி
இப்போது அன்றாட வழக்கத்தில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அதாவது சிறப்பாக படிக்க என்ன தேவை? என்ன குறைபாடு இருக்கிறது, அதை தீர்க்கும் வழிகள் என்ன? என்பது பற்றி யோசிப்பதுதான் மாற்றத்திற்கான அடிப்படை.
எனவே நமக்கு எந்தப்பாடம் நன்றாக வருகிறது, எந்தப் பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெறுகிறோம்? அதற்கு காரணம் என்ன? மதிப்பெண்களை அதிகமாக்க வழிகள் என்ன? கூடுதல் நேரம் படிக்க வேண்டுமா? விளையாட்டை குறைக்க வேண்டுமா? வேடிக்கை அரட்டையை கட்டுப்படுத்த வேண்டுமா? என்பது பற்றி யோசியுங்கள். குழுவாக செயல்பட்டால் தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்து கொண்டு திட்டம் தீட்ட வேண்டும். பின்னர் மாற்றத்தின் அடுத்த விதியை செயல்படுத்தலாம்.
தீர்வை பரிசோதித்தல்
இப்போது பிரச்சினைகள், தீர்வுகள் அடங்கிய பட்டியல் உங்களிடம் தயாராக இருக்கும். அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அதை செயல்படுத்த வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர், தனக்குத் தெரிந்த பாடத்தை மற்றவர்க்கு கற்றுத் தரலாம். மதிப்பெண் குறைவாக உள்ள பாடத்திற்கு முன்னுரிமை தந்து அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படலாம்.
காலையில் தாமதமாக எழுவதும், மாலையில் நீண்ட நேரம் பொழுதுபோக்குவதும் படிப்புக்கு இடையூறாக இருந்தால் அதை சரி செய்யலாம். பள்ளியில் சக மாணவர்கள் படிப்பதற்கு இடையூறாக செயல்பட்டால், வீட்டின் பொருளாதார வசதி மற்றும் தேவையான உபகரணங்கள் இன்மை கல்விக்கு தடையாக இருந்தால் அதை சீர் செய்வதற்காக பெற்றோர், ஆசிரியர் உதவியை நாடலாம்.
புரியாத பாடங்களை புரிந்து கொள்ளவும், குறிப்பிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெறவும் பல வழிகள் உள்ளன. பாடங்களை மனதில் பதிய வைக்க திரும்பத் திரும்ப படித்தல், எழுதிப் பார்த்தல், வீடியோ நிகழ்வாக பாடத்தை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தல், அல்லது வீடியோ வழியாகவே பாடம் படித்தல், நண்பனிடம் ஒப்பித்தல் என வெற்றிக்கான திட்டத்தை செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.
முடிவை ஆராய்தல்
அடுத்த கட்ட மாற்றமாக முயற்சிகளின் பலன்களை ஆராய வேண்டும். அதாவது நமது திட்டம் பலன் தந்திருக்கிறதா? என பார்க்க வேண்டும். அடுத்த பருவத் தேர்வில் உங்கள் திட்டம் பலன் தந்திருக்கிறதா? கூடுதல் மதிப்பெண் பெற்றிருக் கிறோமா? என சோதித்துப் பார்க்க வேண்டும். இப்படியாக கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வேண்டும். தேவையற்ற பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். உங்கள் குழுவில் அனைவருக்கும் மதிப்பெண்களில் முன்னேற்றம் கிடைத்தால் நீங்கள் ஒரு வெற்றிக் கூட்டணி.
அடுத்த செயல்திட்டத்திற்கு தயாராதல்
நன்றாகப் படிக்கவும், மதிப்பெண் உயரவும் பாடுபட்ட உங்கள் கூட்டணி, அடுத்து மற்றொரு செயல்திட்டத்தைத் தீட்டலாம். அது பள்ளியில் முதலிடம் பெறுவது, மாவட்டத்தில் முதலிடம் பெறுவது, மாநில அளவில் சிறப்பிடம் பெறுவது என உயர்ந்த லட்சியமாக இருக்கலாம். அதை அடைவதற்கான திட்டத்தில் ஆசிரியர் மற்றும் பெற்றோரையும் தங்களுடன் கூட்டுசேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், வழிநடத்தவும் பெரிதும் துணை நிற்பார்கள். இத்தகைய திட்டமும், தொடர்முயற்சியும் பெருவெற்றிகளைத் தரும்.
பள்ளிப் பாடத்திட்டம் என்றில்லை, பள்ளியின் தரத்தை உயர்த்துதல், ஒரு கிராமத்தின் தரத்தை உயர்த்துதல், பொதுத் தொண்டு செய்தல் என எல்லா திட்டங்களிலும் இதுபோல கூட்டு முயற்சியும், சின்னச்சின்ன மாற்றங்களால் ஆன தொடர் முயற்சியும் வெற்றியை சாத்தியமாக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் நீங்களும் நாளைய தலைவர்களாகலாம், எதிலும் வெற்றியை குவிக்கலாம்!
Related Tags :
Next Story