ஆர்.பொன்னாபுரம் நரிக்குறவர் காலனியில் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், சப்–கலெக்டரிடம் மனு
ஆர்.பொன்னாபுரம் நரிக்குறவர் காலனியில் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மனு கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது ஆர்.பொன்னாபுரம் சத்யராஜ் நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நரிக்குறவர் காலனியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றோம். இங்கு 33 தொகுப்பு வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அனைத்து வீடுகளும் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் அந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் குடிநீர் வசதிக்காக, பழுதடைந்த மின் மோட்டாரை பழுதுபார்க்க ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சலவை தொழிலாளர்கள் மற்றும் சரவ தொழிலாளர்கள் சுமார் 188 பேருக்கு கடந்த 2011–ம் ஆண்டு தலா 1½ சென்ட் வீதம் பட்டா வழங்கப்பட்டது. இடம் வழங்கி 8 ஆண்டுகள் ஆன நிலையில் அதில் வெறும் 23 நபர்கள் தான் அரசு மூலம் தொகுப்பு வீடுகள் கட்டி உள்ளனர். அதிலும் 12 குடும்பங்கள் தான் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர்.
மீதமுள்ள 160–க்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டா இடங்கள் வீடுகள் கட்டாமலும், குடியிருப்பு இல்லாமலும் காலியாக உள்ளன. இதுவரைக்கும் யாரும் குடியிருக்க வருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத சூழ்நிலையில் உள்ளது. மேலும் பட்டா வழங்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிவுறும் நிலையில் உள்ளதாலும், 2 ஆண்டுகள் கழித்தால் பட்டாக்களை விற்று விடலாம் என்று சிலர் கருதுவதாக தெரிகிறது. எனவே பட்டா உள்ள இடங்களில் குடியிருக்காத 160–க்கும் மேற்பட்ட பட்டா பெற்ற நபர்களின் பட்டாக்களை ரத்து செய்து விட்டு, வீடு இல்லாத ஏழ்மை நிலையில் உள்ள நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள பெரும்பதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பதி பகுதியில் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகில் கற்களை வெடி வைத்து தகர்த்து, அவற்றை பொடி செய்து கிரஷர் தொழில் மற்றும் எம்சேண்ட் தயாரிப்பது போன்ற தொழில்களை செய்ய போவதாக தெரிகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு உள்ளிட்ட இதர உயிர்களுக்கு சுகாதார சீர்கேடு உண்டாகும். கற்களை வெடி வைத்து எடுக்கும் போது வீடுகள், கோவில்கள், தடுப்பணைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நிலத்தடி நீர் திசைமாறி குவாரி பணிகள் மேற்கொள்ளும் இடங்களை நோக்கி சென்று விடும். இதன் காரணமாக கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு போகும். பொதுமக்களின் ஆட்சபணைகளை பொருட்படுத்தாமல் கல்குவாரி உள்ளிட்ட இதர தொழில்களுக்கு அரசு அனுமதி அளித்தால், சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும் குவாரி அமைக்க அனுமதி வழங்க ஏதுவாக சான்று வழங்கிய அதிகாரிகள் மீதும் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு கோரவும் எங்களுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.