நூல் விலையை மாதந்தோறும் நிர்ணயிக்க வேண்டும், கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை மனு
நூல் விலையை மாதந்தோறும் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் கலெக்டர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராக்கியண்ணன் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–
ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான விசைத்தறி உரிமையாளர்கள் செயற்கை நூல் எனப்படும் ‘ரயான்’ நூல்களை, மில் உரிமையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து துணிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள்.
‘ரயான்’ நூலின் மூலப்பொருட்களின் விலை மாதம் ஒருமுறை மாற்றப்படுகிறது. கடந்த 15 நாட்களில் ‘ரயான்’ நூல் கிலோவுக்கு ரூ.202–ல் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.224–க்கு உயர்த்தப்பட்டு உள்ளது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விசைத்தறி உரிமையாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே நூல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதேபோல் கூட்டுறவு நூற்பாலைகளில் ‘ரயான்’ நூல்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், கைத்தறிக்கான துணி ரக ஒதுக்கீடு இருப்பதுபோல விசைத்தறிக்கும் உண்டான ரகங்களை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்த ரகங்களை ‘ஆட்டோ லூம்’ போன்ற தானியங்கி தறிகளில் உற்பத்தி செய்ய தடை விதித்து விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.