சாயல்குடி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை


சாயல்குடி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 Sep 2018 10:45 PM GMT (Updated: 3 Sep 2018 3:13 PM GMT)

சாயல்குடி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாயல்குடி,

சாயல்குடி–கமுதி சாலையில் இருந்து வேடகரிசல்குளம், ஏ.உசிலங்குளம், மனிவலை, புதுகுடியிருப்பு, வெள்ளம்பல், அல்லிக்குளம், கரிசல்குளம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இந்த சாலைகள் வழியாகத்தான் அந்தந்த பகுதி கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு சாயல்குடிக்கு சென்றுவர வேண்டியுள்ளது.

மேலும் சாயல்குடியில் இருந்து காலை 11 மணிக்கு ஒரு பஸ்சும், இரவு 7 மணிக்கு ஒரு பஸ்சும் இந்த கிராமங்கள் வழியாக இயக்கப்படுகிறது. சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் ரோட்டின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளன.

இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாத நிலை உள்ளது. அவ்வாறு எதிரெதிரே வாகனங்கள் வரும் போது இந்த சாலை ஓர பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் சாலையில் மைய பகுதிகளில் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story