செல்லாத ரூபாய் நோட்டுகள் கடத்திய விவகாரம்: 4 பேர் கைது
செல்லாத ரூபாய் நோட்டுகளை கடத்தியது தொடர்பாக மேலூரை சேர்ந்வர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காரில் கடத்திச் செல்லப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் தனிப்படை போலீசார் வரிச்சியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும்.
இதுதொடர்பாக காரில் வந்த பரமக்குடியை சேர்ந்த நவீன்சக்தி(வயது 27), திருப்பாச்சேத்தி அருகே உள்ள பூவந்தியை சேர்ந்த ராஜசேகர்(32), தர்மா(25) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்த சம்பவத்தில் மேலூரை சேர்ந்த சரவணன்(51) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, அவர்கள் 4 பேர் மீதும் கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கடத்தி வந்துள்ளனர். அவ்வாறு செல்லும் வழியில் போலீசில் மாட்டிக்கொண்டனர் என்றனர்.