கவர்னர் கிரண்பெடி மலிவு விளம்பர அரசியலில் ஈடுபடுகிறார் - முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி குற்றச்சாட்டு


கவர்னர் கிரண்பெடி மலிவு விளம்பர அரசியலில் ஈடுபடுகிறார் - முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Sept 2018 5:00 AM IST (Updated: 3 Sept 2018 8:49 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடி மலிவு விளம்பர அரசியலில் ஈடுபடுகிறார் என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுச்சேரிக்கு நேற்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

டெல்லி யூனியன் பிரதேச முதல்–மந்திரிக்கு, பிற மாநில முதல்–அமைச்சர்களை விட குறைவான அதிகாரம் தான் உள்ளது. அங்குள்ள கவர்னர், மத்திய உள்துறை, நகர்புற மேம்பாட்டுத்துறை ஆகிய அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறார். டெல்லி முதல்–மந்திரி, கவர்னர் இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் என்ற பிரச்சினை எழுந்தபோது, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில், நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை விட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தான் கூடுதல் அதிகாரம் என்றும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பொருந்தும்.

புதுவை மாநில கவர்னர் கிரண்பெடி, டெல்லியில் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது வெற்று விளம்பர அரசியலில் தான் ஈடுபட்டார். அவரது போக்கு காரணமாக தான் டி.ஜி.பி. போன்ற உயர் பதவிகள் அவருக்கு கிடைக்கவில்லை. புதுவையில் கவர்னராக பதவியேற்ற பின்னரும் காவல்துறை அதிகாரியை போல நினைத்துக்கொண்டு மலிவு விளம்பர அரசியலில் ஈடுபடுகிறார்.

அவரது நடவடிக்கைக்கு பிரதமர் மோடியும் ஊக்கம் கொடுக்கிறார். பா.ஜ.க. கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் மத்திய அரசு தங்கள் பிரதிநிதிகள் (கவர்னர்) மூலம் மறைமுக தொல்லை கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story