படகுகளை இலங்கை அரசுடைமையாக்கும் சட்டத்தை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


படகுகளை இலங்கை அரசுடைமையாக்கும் சட்டத்தை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:45 AM IST (Updated: 3 Sept 2018 9:39 PM IST)
t-max-icont-min-icon

கடற்படையால் பிடிக்கப்படும் படகுகளை இலங்கை அரசுடைமையாக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அனைத்து விசைப்படகுகள் மீனவர் சங்க கூட்டம் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, எமரிட், தட்சிணாமூர்த்தி, சகாயம், அல்போன்ஸ் உள்பட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகளும், மீனவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், டீசல் விலை உயர்வால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கு தேவையான அளவு டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும். இலங்கை அரசு தற்போது புதிதாக இயற்றியுள்ள சட்டத்தின்படி, பிடிக்கப்படும் வெளிநாட்டு படகுகளை அரசுடைமையாக்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். கடந்த 28–ந்தேதி பிடிபட்ட 3 படகுகள் உள்பட இலங்கை கடற்படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 187 படகுகளை விடுவிக்க வேண்டும். முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வருகிற 7–ந்தேதி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் பஸ் நிலையத்தில் அனைத்து மீனவர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், அதன் பின்னரும் மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தமிழக மீனவர்கள் ஒன்று திரண்டு டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story