மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் 10–வது நாளாக வேலை நிறுத்தம்


மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் 10–வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து சேதுபாவாசத்திரத்தில் மீனவர்கள் நேற்று 10–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேதுபாவாசத்திரம்,


தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தியதாக கூறி மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களுக்கான டீசல் மானியத்தை ரத்து செய்தனர். மேலும் மீன்பிடி அனுமதிக்கான டோக்கன்களை வழங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கையை அதிகாரிகள் தகுந்த ஆதாரங்கள் இன்றி எடுத்திருப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், ஆதாரங்கள் இன்றி நடவடிக்கை எடுத்த மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் சேதுபாவாசத்திரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 10–வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது.

இதுபற்றி விசைப்படகு மீனவர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:–


மீனவர்கள் தவறு செய்யும் வகையில் இரட்டைமடி வலையை பயன்படுத்தினால் ஆதாரத்துடன் பிடித்து மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆனால் மீனவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் மீன்பிடி தொழிலுக்கே செல்லாத சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த பரமசிவம், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். எவ்வித ஆதாரமும் இன்றி கரையில் நிறுத்தியிருந்த விசைப்படகுகளை ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.


இதேபோல் மற்ற மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தயங்க மாட்டார்கள். இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட கலெக்டர் அழைக்கவில்லை.

எனவே மீன்வளத்துறை அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். தீர்வு கிடைக்கும்வரை வேலை நிறுத்தத்தை கைவிடப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story