விஷவண்டுகள் கடித்து பள்ளி மாணவன் சாவு
காட்டுமன்னார்கோவில் அருகே விஷவண்டுகள் கடித்து பள்ளி மாணவன் சாவு உயிரிழந்தான்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மகன் பிரதீப் (வயது 13). இவர் அதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், பிரதீப் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு மூங்கில் மரத்தில் கூடு கட்டிருந்த விஷ வண்டுகள் திடீரென பிரதீப்பை கடித்தது. இதையடுத்து காயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.