நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்: கடலில் இறங்கி போராட்டம்


நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்: கடலில் இறங்கி போராட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2018 3:30 AM IST (Updated: 4 Sept 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி மூலம் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் புன்னக்காயலில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறுமுகநேரி,


பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது. விசைப்படகுகளில் சுருக்குமடி மூலம் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது. பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் தினமும் மாலை 5 மணிக்கு கடலுக்கு சென்று விட்டு, அன்றைய தினம் இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பி விட வேண்டும் என்று கடந்த 1983-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

விசைப்படகுகளின் அத்துமீறல்களில் இருந்து பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேம்பார், தருவைக்குளம், கீழ வைப்பார், சிப்பிக்குளம், புன்னக்காயல், காயல்பட்டினம் சிங்கித்துறை, கொம்புத்துறை, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம், அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகளை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைத்து இருந்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி, புன்னக்காயலில் நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடி ஏற்றி, கடலில் அணிவகுத்து நின்றனர். பெரும்பாலான மீனவர்கள் கடலில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் கமிட்டி தலைவர் செல்வராஜ் பெர்னாந்து உள்பட பலர் கலந்து கொண்டனர். காயல்பட்டினம் சிங்கித்துறையிலும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் கயஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story