தண்டையார்பேட்டையில் 9-ம் வகுப்பு மாணவனை வேனில் கடத்திய மர்ம கும்பல்


தண்டையார்பேட்டையில் 9-ம் வகுப்பு மாணவனை வேனில் கடத்திய மர்ம கும்பல்
x
தினத்தந்தி 4 Sept 2018 3:45 AM IST (Updated: 4 Sept 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டையில் 9-ம் வகுப்பு மாணவனை வேனில் கடத்திய மர்ம கும்பல், போலீசாரை கண்டதும் இறக்கி விட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவர்களுக்கு கிங்ஜோன் (வயது 13) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் மாலையில் ஜெனிபரும், கிங்ஜோனும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சமையல் எண்ணெய் சிறப்பு தள்ளுபடியில் விற்பதாகவும், வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் ஜெனிபரிடம் தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய ஜெனிபர் அவரிடம் ரூ.1500 கொடுத்துள்ளார்.

பின்னர் சமையல் எண்ணெய் வேனில் இருப்பதாகவும், உங்கள் மகனை அனுப்பி வைத்தால் அவரிடம் கொடுத்து அனுப்புவதாகவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார். அதை நம்பிய ஜெனிபர், தனது மகன் கிங்ஜோனை அவருடன் அனுப்பி வைத்தார்.

அவருடன் சென்ற கிங்ஜோன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிபர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், மாயமான கிங்ஜோனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கிங்ஜோனை அழைத்துச்சென்ற மர்ம நபர், வேனுக்கு சென்றதும் வலுக்கட்டாயமாக அவரது சட்டையை மாற்றக்கூறினார். பின்னர் அந்த நபரும், வேனில் இருந்தவர்களுமாக சேர்ந்து கிங்ஜோனை கடத்தி சென்றனர்.

செல்லும் வழியில் ராயபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இதைப்பார்த்த மர்ம நபர்கள் கிங்ஜோனை அங்கே இறக்கி விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கிங்ஜோனை ராயபுரம் போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்திய அவர்கள், இது குறித்து ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

குழந்தை கடத்தும் கும்பலா?

பின்னர் ஆர்.கே.நகர் போலீசார் சென்று சிறுவன் கிங்ஜோனை அழைத்து வந்தனர். அவரை கடத்திச்சென்றவர்கள், குழந்தைகளை கடத்தும் கும்பலா? அல்லது அவர்களை பழிவாங்கும் நோக்கில் யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story