தூத்துக்குடி விமானத்தில் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி கைது
தூத்துக்குடி விமானத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம் போட்ட மாணவி தமிழிசை சவுந்தரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். அவர் விமானத்தின் 3-வது இருக்கையில் அமர்ந்து வந்தார்.
அப்போது, 8-வது இருக்கையில் இருந்த கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனால் விமானத்தில் பரபரப்பு நிலவியது.
அதன்பிறகு விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை மதியம் 12.01 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அறையில் பொருட்களை எடுப்பதற்காக பயணிகள் காத்து இருந்தனர். அங்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், அந்த இளம்பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்திலும் புகார் செய்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சோபியாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை இளம்பெண் சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவரை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் சோபியாவின் தந்தை சாமி, புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்து உள்ளார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான சோபியா எம்.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்து உள்ளார். தொடர்ந்து கனடாவில் உள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய மாணவி சோபியாவை அவருடைய பெற்றோர் சென்னையில் இருந்து ஊருக்கு அழைத்து வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது. இவருடைய தந்தை சாமி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். தாய் மனோகரி தலைமை நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சோபியாவுக்கு ஒரு சகோதரர் உள்ளார்.
இதுகுறித்து பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் விமானத்தில் வரும் போது, அதே விமானத்தில் இருந்த ஒரு பெண் பயணி கையை உயர்த்தி, பா.ஜனதா அரசுக்கு எதிராக மிக மோசமான கோஷத்தை எழுப்பினார். விமானத்துக்குள் பேசுவது முறையல்ல என்று நான் எந்த பதிலும் கூறாமல் வந்து விட்டேன். விமான நிலைய வரவேற்பு அறைக்கு வந்த பிறகு, ஒரு விமானத்தில் இதுபோன்று பேசுவது சரியா? என்று அந்த பெண்ணிடம் கேட்டேன்.
அதற்கு எனக்கு பேச்சுரிமை இருக்கிறது. நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூறிவிட்டு சத்தம்போட்டார். சம தளத்தில் பா.ஜனதாவை பற்றி விமர்சிக்கட்டும். அதைவிட மேலாக விவாதிக்கும் துணிச்சலும், தெம்பும் எனக்கு இருக்கிறது. ஆனால் விமானத்துக்குள் சக பயணிகள் முன்னால், இது போன்று கோஷம் போடுவதற்கு உரிமை இல்லை.
அவரின் பின்புலத்தை நான் சந்தேகிக்கிறேன். அவர் சாதாரண பயணி போன்று தோன்றவில்லை. எனது உயிருக்கே ஆபத்தான நிலைதான் அங்கு இருந்தது. ஏனென்றால், அவர் எழுந்து நின்று கையை உயர்த்தி கோஷம் போட்ட விதம், அவருக்கு பின்புலத்தில் ஏதாவது ஒரு அமைப்பு இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்.
அவர் சொன்ன வார்த்தைகள் சாதாரண பயணிகள் சொல்லும் வார்த்தைகளும் கிடையாது. தமிழகத்தில் இது போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு இருக்க கூடாது. இவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். அவரின் பின்புலத்தில் இருப்பதை விசாரிக்க வேண்டியது போலீஸ் துறை. என்னை பொறுத்தவரை இது சாதாரண விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story