அழகு நிலைய பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கொலை மிரட்டல் சக ஊழியர் கைது


அழகு நிலைய பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கொலை மிரட்டல் சக ஊழியர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2018 3:15 AM IST (Updated: 4 Sept 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

முகப்பேரில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்த சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் சுந்தரி(வயது30 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அதே அழகு நிலையத்தில் போரூரை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

பணியின்போது சதீஷ்குமார் தன்னுடன் பணியாற்றும் சுந்தரியிடம் அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசினார். இதை சுந்தரி தடுத்தபின்னரும் சதீஷ்குமார் தொடர்ந்து அவ்வாறு பேசி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மதியம் 3.30 மணி அளவில் அழகு நிலையத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாதநேரத்தில் சதீஷ்குமார் சுந்தரியிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவரை தகாத உறவுக்கு அழைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்போட்டு அங்கு இருந்து சுந்தரி தப்பி செல்லும் போது அவரிடம் சதீஷ்குமார் இங்கு நடந்ததை யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து சுந்தரி நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ்குமாரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story