நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நவீன பெட்டிகள்
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நவீன பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. அதிர்வு குறைந்திருப்பதால் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
நெல்லை,
இந்திய ரெயில்வே துறை ரெயில் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. பயணிகளுக்கு கூடுதல் வசதிகளுடன் கூடிய நவீன பெட்டிகள், அதிவேக என்ஜின்கள், மின்சார ரெயில் என சேவையை மேம்படுத்தி வருகிறது.
இதையொட்டி எல்.எச்.பி. எனப்படும் நவீன வசதிகளுடன் கூடிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற ரெயில் சேவைகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், எல்.எச்.பி. நவீன ரெயில் பெட்டிகள் தற்போது நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயன்படுத்தப்படுகின்றன. முதன்முதலாக நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த பெட்டிகள் பொருத்தி இயக்கப்பட்டது.
இதில் 1 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி, 6 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இணைந்த பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த புதிய பெட்டிகளுடன் கூடிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது.
இந்த பெட்டிகள் ஜெர்மனி நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை எளிதில் தீப்பற்றாத வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன. பழைய பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டிகள் விபத்து ஏற்படும்போதும், தடம் புரளும்போதும் ஒன்றன் மீது ஒன்று மோதி அனைத்து பெட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் எல்.எச்.பி. பெட்டிகளில் புதிய இணைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தடம் புரண்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ பின்னால் வரும் பெட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும் பெட்டியின் எடையும் குறைந்திருப்பதால் மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வேகம் அதிகரித்து இயக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பெட்டிகளின் உள்ளே முற்றிலும் நவீன ரக இருக்கைகள், படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வழக்கமான பெட்டிகளில் 72 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஆனால் இந்த பெட்டிகள் சற்று நீளமாக இருப்பதால் 80 பயணிகள் படுக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த பெட்டிகளில் வழக்கமான அதிர்வுகள் பெருமளவு குறைந்து உள்ளது.
நவீன வசதிகள் கொண்ட பெட்டியில் பயணம் செய்வதற்கு பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளனர். அதிர்வு குறைந்து இருப்பதால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு பழைய பெட்டியை விட சிறப்பாக உள்ளது, பயண களைப்பு தெரியவில்லை என்று பயணிகள் கூறினர்.
நேற்று காலை நெல்லைக்கு வந்த நவீன ரக ரெயில் பெட்டிகளுடன் கூடிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. புதிய பெட்டியில் பயணிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பயணம் செய்தனர்.
இதேபோல் பொதிகை ரெயிலிலும் எல்.எச்.பி. நவீன ரக ரெயில் பெட்டிகள் பொருத்தப்படுகிறது. நவீன பெட்டிகள் பொருத்தப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு புறப்படுகிறது. இதே ரெயில் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நாளை (புதன்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
நவீன பெட்டிகளுடன், அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதால் பயண நேரம் குறையும். மேலும் இரட்டை ரெயில் பாதை பணிகளும் முடிந்து விட்டால் நெல்லை -சென்னை, செங்கோட்டை -சென்னை இடையிலான பயண நேரம் பெருமளவு குறையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story