மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கிவைத்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 8 பேர் கைது + "||" + House Hoarding 1 ton semmarakkattaikal Seized 8 people arrested

வீட்டில் பதுக்கிவைத்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 8 பேர் கைது

வீட்டில் பதுக்கிவைத்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 8 பேர் கைது
கொடுங்கையூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் காவேரி நகரில் மர்மநபர்கள் சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதுபற்றி நேற்று காலை நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் தேவகுமார், எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசனுக்கு தகவல் தெரிவித்தார்.


உடனடியாக உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் போலீசார் காவேரி நகருக்கு சென்று சோதனை நடத்தினார்கள். காவேரி நகர் பிரதான சாலையில் மூசா (வயது 45) என்பவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு இருந்த 1 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மூசா ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

மேலும், இந்த கடத்தலுக்கு மூசாவின் உறவினர் பைசார் (26), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சையத் (27), சுப்பையா (59), மண்ணடியை சேர்ந்த அப்சல்கான் (29), பூந்தமல்லியை சேர்ந்த சீனிவாசன் (36) மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த அப்பாஸ் (22) அப்சல் குரு (26) ஆகியோர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூசா உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். செம்மரக்கட்டைகள் கடத்தலுக்காக பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கொடுங்கையூர் போலீசார் மூசா உள்பட 8 பேரையும் சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.