80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பூனைக்குட்டி உயிருடன் மீட்பு


80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பூனைக்குட்டி உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 4 Sept 2018 3:30 AM IST (Updated: 4 Sept 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பூனைக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

கோவை,

வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் விலங்குகளில் பூனையும் ஒன்று. அதன் குட்டி செய்யும் குறும்புக்கு அழவே கிடையாது. குறிப்பாக குழந்தைகள் பூனைக்குட்டியை ஆசையாக தூக்கி வைத்து விளையாடுவதும் உண்டு. இதனால் பெரும்பாலான வீடுகளில் பூனைகளை வளர்த்து வருகிறார்கள்.

கோவை உப்பிலிபாளையம் விவேகானந்தர் நகரில் உள்ள இந்திரா கார்டனை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனது வீட்டில் ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். ஒரு மாதமே ஆன அந்த பூனைக்குட்டி, அந்த வீட்டு சுற்றுச்சுவருக்குள் இருக்கும் பகுதியில் அங்கும் இங்கும் துள்ளி ஓடி விளையாடியது.

இந்த நிலையில் நேற்று காலையில் 11 மணியில் இருந்து அந்த பூனைக்குட்டியை காணவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அதை தேடி பார்த்தும் அது கிடைக்கவில்லை. ஆனால் அதன் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் அந்த சத்தம் எங்கு வருகிறது என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்டு, தேடினார்கள்.

அப்போது அது வீட்டின் முன்பக்கத்தில் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து வருவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் அந்த ஆழ்துளை கிணற்றில் ‘டார்ச் லைட்’ அடித்து பார்த்தபோது, அதற்குள் கிடந்ததை கண்டுபிடித்தனர். அங்கும் இங்கும் ஓடியபோது, அந்த ஆழ்துளை கிணற்றில் பூனைக்குட்டி தவறி விழுந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து உடனே அவர்கள் கோவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி பால சுப்பிரமணியம் உத்தரவின்பேரில், நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் சென்று பார்த்தபோது, 80 அடியில் அந்த பூனைக்குட்டி கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பூனைக்குட்டியை மீட்பதற்காக பிரத்யேக கருவி கொண்டு வரப்பட்டது. அந்த கருவியை தீயணைப்பு படை வீரர்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தினார்கள். எனினும் அதை பிடித்து பூனைக்குட்டியால் வெளியே வர முடியவில்லை. தொடர்ந்து அது கத்திக்கொண்டே இருந்தது.

உடனே தீயணைப்பு படை வீரர்கள் 80 அடி நீளமுள்ள 2 பிளாஸ்டிக் குழாயை அங்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த குழாயை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கினார்கள். அது பூனைக்குட்டி கிடக்கும் இடம் வரை சென்றதும், அந்த குழாயை பூனைக்குட்டி நன்றாக பிடித்துக்கொண்டது.

பின்னர் அந்த குழாயை தீயணைப்பு படை வீரர்கள் மெதுவாக மேலே எடுத்தபோது அந்த பூனைக்குட்டியும் மேலே வந்து சேர்ந்தது. இவ்வாறு அவர்கள் அந்த பூனைக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு படை வீரர்களை பாராட்டினார்கள்.

இது குறித்து தீயணைப்பு படை வீரர்கள் கூறும்போது, ‘பூனைக்குட்டி தவறி விழுந்த ஆழ்துளை கிணறு 6 இன்ச் அகலம் கொண்டது. அதற்குள் தண்ணீர் இல்லை. அதன் மீது போடப்பட்டு இருந்த சாக்கின் மீது பூனைக்குட்டி துள்ளி விழுந்தபோது, அந்த சாக்கு பிய்ந்ததால் பூனைக்குட்டி உள்ளே விழுந்துவிட்டது’ என்றனர்.


Next Story