பாம்பன் ரோடு பாலம் அருகே புதிய பாலம் கட்ட கடலுக்குள் மிதவை அமைத்து ஆய்வு
புதிய ரோடு பாலம் கட்டுவதற்காக பாம்பன் ரோடு பாலம் அருகே கடலுக்குள் மிதவை அமைத்து ஆய்வு பணி நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் ஏராளமான வாகனங்கள் பாம்பன் ரோடு பாலம் வழியாகவே வந்து செல்கின்றன. ரோடு பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் எற்பட்டு வருவதுடன், பாலம் சரி வர பராமரிப்பில்லாமல் இருந்து வருகிறது. மேலும் புண்ணிய தலமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு நாட்டில் பல பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான அனுமதியும் வழங்கி விட்டது.
இந்த சாலை அமைக்கப்படும் போது பாம்பன் கடலில் கண்டிப்பாக புதிய பாலம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும். அதை தொடர்ந்து பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுவதற்காக கடந்த ஜூலை மாதம் முதல் மண்டபம் கடற்கரை பூங்கா, பாம்பன்தெற்குவாடி போன்ற கடற்கரை பகுதிகளில் பல இடங்களில் மண்ஆய்வு நடைபெற்றது. மண்டபம் கடற்கரை பூங்கா அருகே உள்ள 2 இடங்களில் கடலுக்குள் மிதவை அமைத்து ஆழ்துளை மூலம் 40 அடி வரை துளையிட்டு மண் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் இந்த பணி நேற்று முதல் தொடங்கியது. அதில் கடலுக்குள் இரும்பினால் ஆன பெரிய மிதவைகள் அமைத்து அதில் ஆழ்துளை எந்திரம் அமைத்து, அதன் மூலம் கடலின் அடியில் துளையிட்டு மண்ணை பரிசோதனைக்காக ஆய்வு நடைபெற்று வருகிறது. கடலின் மேல் பகுதியில் இருந்து எவ்வளவு தூரம் வரையிலும் மண் உள்ளது. மண்ணுக்கு பிறகு எத்தனை அடியில் பூமிக்கடியில் பாறை உள்ளது, மண்ணில் உப்புத் தன்மை எந்த அளவு உள்ளது என்ற ஆய்வு நடத்தப்படுகிறது.
இது பற்றி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;– பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது. அதைத்தொடர்ந்து கடலின் உப்புத் தன்மைக்கு ஏற்ற, எந்த வேதியியல் கலவைகள் மற்றும் கற்கள் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்துவது என்பதற்காக மண் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இது வரையிலம் 12 இடங்களில் நிலப்பகுதிகளில் மண் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அது போல் மண்டபம் கடற்கரை பூங்கா அருகே 2 இடங்களில் கடல் பகுதியிலும் மண்ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பாம்பன் ரோடு பாலம் அருகே உள்ள கடலில் மண் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பாம்பன் கடலில் இருந்து தொடங்கி சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்தில் 14 இடங்களில் மண் ஆய்வு நடத்தப்பட உள்ளது.இந்த மண் ஆய்வு பணியானது இன்னும் ஒரு மாத்தில் முழுமையாக முடிக்கப்படும். அதன்பின்பு பாலம் கட்டுவதற்கான திட்ட வரை படம் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.