ஆளில்லாத ரெயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
விழுப்புரம் அருகே ஆளில்லாத ரெயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க படிப்படியாக ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளை மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம் அருகே வளவனூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஆளில்லாத ரெயில்வே கேட்டை மூடுவதற்காக நேற்று காலை 9 மணியளவில் ரெயில்வே ஊழியர்கள் வந்தனர்.
இதையறிந்ததும் வளவனூர் காந்திநகர், திருவள்ளுவர் நகர், கூட்டுறவு நகர், கோவிந்தராஜ் நகர், சுப்பிரமணி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காந்திநகர் ரெயில்வே கேட் அருகில் திரண்டு வந்து ரெயில்வே ஊழியர்களை தடுத்து நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் திடீரென அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆளில்லாத ரெயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசாரும் மற்றும் விழுப்புரம் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ரெயில்வே ஊழியர்கள், காந்தி நகர் ஆளில்லாத ரெயில்வே கேட்டை மூடச்சொல்லி ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாற்றாக சிறுவந்தாடு செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தும்படி அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், காந்தி நகர் ரெயில்வே கேட்டை கடந்துதான் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதுபோல் இந்த கேட்டை கடந்துதான் பள்ளிக்கும், அங்கன்வாடி மையத்திற்கும் குழந்தைகள் வர வேண்டியுள்ளது.
இந்த கேட்டை மூடினால் சிறுவந்தாடு செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டுக்கு சுமார் 4 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி வளவனூர் பகுதியில் ஏதேனும் சாலை விபத்து நடந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் காந்திநகர் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் வழியாகத்தான் மாற்றுப்பாதையாக சென்று வருகின்றனர்.
ஆகவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காந்திநகர் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை மூடக்கூடாது. உடனடியாக அங்கு கேட் கீப்பரை நியமிக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு ரெயில்வே ஊழியர்களும், தங்கள் முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story