வறண்டு கிடக்கும் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் தண்ணீர் நிரப்பக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்


வறண்டு கிடக்கும் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் தண்ணீர் நிரப்பக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:30 AM IST (Updated: 4 Sept 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வறண்டு கிடக்கும் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவரிடம் ஏரிகளில் தண்ணீர் நிரப்பக்கோரி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள மனையேறிப்பட்டியில் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடம்பா ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து பிரியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் வருகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் ஏரி வறண்டு கிடக்கிறது. இந்த ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் தரிசாக கிடக்கிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மாயனூரில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டும், இதுவரை செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வந்து சேராததால் ஏரிகள் எல்லாம் வறண்டு காணப்படுகிறது.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியை நேற்று பார்வையிட்ட தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு செல்லும் வழியில் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டியில் உள்ள கடம்பா ஏரி வறண்டு கிடப்பதை பார்வையிட்டார்.

பின்னர் ஏரிக்குள் இறங்கி சென்ற அவரை, அந்த பகுதி விவசாயிகள் சந்தித்து ஏரிகளுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், புதிய கட்டளை வாய்க்கால் மூலம் 63 ஏரிகளுக்கும், உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் 18 ஏரிகளுக்கும் தண்ணீர் வரும். இவற்றின் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். 37 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. சாகுபடியும் செய்ய முடியவில்லை. எனவே புதிய கட்டளை வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொண்டு, ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ.க்கள் நேரு, துரை.சந்திரசேகரன், மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Next Story