சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து கடலூர் குப்பன்குளம் பகுதி மக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பாரதிதாசன் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குப்பன்குளம் பகுதி கிளை செயலாளர் பழனி தலைமையில் பாரதிதாசன் நகர் பகுதி மக்கள் நேற்று கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களில் பிடித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.
பின்னர் சுகாதாரமற்ற குடிநீரை வினியோகம் செய்யும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்த னர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் மாதவன், நகர செயலாளர் அமர்நாத், நகர குழு உறுப்பினர்கள் பால்கி, சேட்டு, நகர மாதர்சங்க தலைவி தைனீஸ் மேரி, கிளை செயலாளர்கள் சதீஷ், பழனி, அல்லாபிச்சை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பாரதிதாசன் நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலி தொழிலாளிகள். நகராட்சி நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் கடந்த ஒருமாத காலமாக கழிவுநீர் கலந்து வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்தால் நோய்கள் வரும் என்பதால் டிராக்டர் டேங்கர் மற்றும் லாரிகளில் தனியார் கொண்டு வரும் குடிநீரை ஒரு குடத்துக்கு 8 ரூபாய் கொடுத்து குடிநீரை வாங்கி பருகி வருகிறோம்.
மேலும் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து அருகில் உள்ள போடிசெட்டி தெருவிற்கு சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலை இருப்பதால் பெண்கள், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியே செல்லாமல் தேங்கி நிற்கிறது. மழைக்காலம் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு இங்குள்ள கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளையும் சரியாக அள்ளுவது இல்லை. இதனால் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வரும் எங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story