அம்புலி ஆற்றில் உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை


அம்புலி ஆற்றில் உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Sep 2018 10:30 PM GMT (Updated: 3 Sep 2018 9:03 PM GMT)

அம்புலி ஆற்றில் உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மழை காலம் தொடங்கும் முன்பு அந்த பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிக்கு மேற்கில் இருந்து சிறிய அளவில் உருவாகும் அம்புலி ஆறு ஆலங்குடியிலிருந்து விரிவடைந்து பள்ளத்திவிடுதி, கொத்தமங்கலம், பனசக்காடு, மாங்காடு, கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு பகுதிகளில் விரிவடைந்து பெரிய அளவில் செல்கிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் வரும் போது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மிகப்பெரிய பாசன ஏரிகள், குளங்கள் நிறைந்து விவசாயத்த்திற்கு பயன்பட்டு வருகிறது. மேலும் குளங்கள், ஏரிகள் நிரம்பிய பிறகு மீண்டும் மற்ற வாய்க்கால்கள் மூலம் ஆற்றுக்கே தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி, குளங்களில் நீர் நிரம்பி விவசாயம் செய்வதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் குறையாமல் காக்கப்படுகிறது. ஆனால் தற்போது இப்பகுதியில் ஆங்காங்கே செடி கொடி வளர்ந்து புதர் மண்டியும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாலும், பல ஆண்டுகளாக மராமத்து பணிகள் செய்யப்படாததாலும் தண்ணீர் வரத்து இன்றி காணப்படுகிறது.

கீரமங்கலம், நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வருவதால் கடந்த ஆண்டு அப்பகுதி விவசாயிகள் ஏரி, குளங்களுக் கு செல்லும் வாய்க்கால்களை கண்டறிந்து சொந்த செலவில் விவசாயிகளே தூர்வாரினர். அதன் பிறகு மழை இல்லாததால் ஏரி குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் மேலும் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிட்டது.

இந்த நிலையில், ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையான செரியலூர், கரம்பக்காடு வரை ஆற்றில் உள்ள செடி கொடிகளை ஆக்கிரமிப் புகளை அகற்றி அம்புலி ஆற்றை குடிமராமத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கையையடுத்து கடந்த மாதம் மாங்காடு, கீரமங்கலம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல இடங்களில் அம்புலி ஆறு சிறிய வாய்க்கால் அளவில் உள்ளதையும் பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.

தற்போது அதிகாரிகள் அம்புலி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஆற்றில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதையும், ஆறு முழுவதும் மரம் செடி கொடிகள் மண்டி புதராக காட்சி அளிப்பதையும் அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்து கணக்கிட்டுள்ளனர். மழைக் காலம் தொடங்கும் முன்பே விரைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்து கரைகளை பலப்படுத்தினால் இந்த ஆண்டு மழைக்காவது அம்புலி ஆற்றில் தண்ணீர் செல்லும். அதன் மூலம் பாசன ஏரி குளங்களை நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாத்துக் கொள்ள முடியும். காலம் கடந்தால் மழைத் தண்ணீர் வீணாகிப் போகும்” என்றனர். 

Next Story